எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் பணியாற்ற வேண்டும்


எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் பணியாற்ற வேண்டும்
x
தினத்தந்தி 30 April 2022 4:34 PM GMT (Updated: 2022-04-30T22:04:15+05:30)

பொதுத்தேர்வு பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் பணியாற்ற வேண்டும் என்று மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் கருப்பசாமி கூறினார்.

வேலூர்

பொதுத்தேர்வு பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் பணியாற்ற வேண்டும் என்று மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் கருப்பசாமி கூறினார்.

ஆயத்த கூட்டம்

தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் வருகிற 5-ந் தேதி முதல் நடைபெற உள்ளது. 

இதையொட்டி வேலூர் மாவட்டத்தில் பொதுத்தேர்வு முதன்மை கண்காணிப்பாளர்கள் மற்றும் துறை அலுவலர்கள், பறக்கும் படை அலுவலர்களுக்கான ஆயத்த கூட்டம் வேலூர் லட்சுமிகார்டன் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நடந்தது.

வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் சம்பத், வேலூர் மண்டல அரசுத்தேர்வுகள் துறை உதவி இயக்குனர் தாயம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி வரவேற்றார்.

கூட்டத்துக்கு மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் கருப்பசாமி தலைமை தாங்கி, ஆசிரியர்களுக்கு தேர்வு பணி நியமன ஆணைகளை வழங்கி பேசியதாவது:-

எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில்...

தேர்வு பணியில் ஈடுபடும் முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பள்ளிகளுக்கு 3 நாட்களுக்கு முன்னதாக சென்று உரிய வசதிகள் உள்ளதா என்று சரிபார்க்க வேண்டும். 

தேர்வு பணிகளில் உரிய கவனம் செலுத்தி எந்தவித குறைபாடுகளும், அசம்பாவிதங்களும் ஏற்படாத வகையில் பணியாற்ற வேண்டும். தேர்வு நாட்களில் தேர்வு மையங்களுக்கு முன்னதாக சென்று பதற்றமின்றி தேர்வு பணிகளில் ஈடுபடவேண்டும்.

அனைத்து தேர்வுகளையும் சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும். பறக்கும்படை அலுவலர்கள் அனைத்து தேர்வு மையம், அறைகளுக்கு அடிக்கடி சென்று சோதனை செய்ய வேண்டும். மாணவர்கள் தேர்வில் காப்பி அடிப்பதை தடுக்க உரிய கவனம் செலுத்த வேண்டும். 

இவ்வாறு அவர் பேசினார்.

வினாத்தாள் கட்டுக்காப்பு மையம்

இதில் பள்ளிக்கல்வி துணை ஆய்வாளர் மணிவாசகம், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் எம்.மகாலிங்கம், தலைமைஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

முடிவில் பறக்கும்படை உறுப்பினர் செ.நா.ஜனார்த்தனன் நன்றி கூறினார்.

அதைத்தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் உள்ள வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களை மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் கருப்பசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Next Story