களை கட்டிய எட்டயபுரம் ஆட்டுச்சந்தை; ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு எட்டயபுரம் வாராந்திர ஆட்டுச்சந்தை நேற்று களை கட்டியது. இதில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.
எட்டயபுரம்:
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு எட்டயபுரம் வாராந்திர ஆட்டுச்சந்தை நேற்று களை கட்டியது. இதில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.
ஆட்டுச் சந்தை
தென் மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற ஆட்டுச் சந்தைகளில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் ஆட்டுச்சந்தையும் ஒன்றாகும். விவசாயிகளிடம் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படும் வெள்ளாடு, சீனி வெள்ளாடு, செம்மறியாடு உள்ளிட்ட ஆடுகளை வாங்கி செல்ல வியாபாரிகள் ஆர்வம் காட்டுவது வழக்கம்.
வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெறும் இந்த ஆட்டுச் சந்தைக்கு மதுரை, ராமநாதபுரம் சிவகங்கை, விருதுநகர், நெல்லை, தென்காசி, நாகர்கோவில், தேனி, கோவை என பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து வியாபாரிகள் ஆடுகளை வாங்கி செல்வார்கள்.
10 ஆயிரம் ஆடுகள் விற்பனை
சாதாரண வாரங்களில் ரூ.1 கோடி ரூபாய் முதல் 2 கோடி ரூபாய் வரை வியாபாரம் நடைபெறும். பொங்கல், தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் என பண்டிகை காலங்களில் 6 கோடி ரூபாய் முதல் 7 கோடி ரூபாய் வரை வியாபாரம் நடப்பது வழக்கம்.
இந்நிலையில் வருகிற 3-ந் தேதி ரம்ஜான் பண்டிகை நடைபெறுவதை முன்னிட்டு நேற்று எட்டயபுரம் ஆட்டுச் சந்தை களை கட்டியது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக சரிவர ஆடுகள் விற்பனை நடைபெறாமல் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு அதிகளவு ஆடுகள் வரத்தும் இருந்தன. அதற்கேற்ப விற்பனையும் இருந்தது. சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
ரூ.5 கோடி
7 கிலோ எடை கொண்ட ஆட்டுக்குட்டி 8,000 ரூபாயும், ஜோடி ஆடு 15 ஆயிரத்தில் இருந்து 40 ஆயிரம் ரூபாய் வரை விலை போனதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இந்த ஆண்டு ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சுமார் 5 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெற்று உள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story