விழுப்புரம் மாவட்டத்தில் 2,07,036 தடுப்பூசி மருந்துகள் தயார் நிலையில் உள்ளது கலெக்டர் மோகன் தகவல்
விழுப்புரம் மாவட்டத்தில் 2,07,036 தடுப்பூசி மருந்துகள் தயார் நிலையில் உள்ளது என்று கலெக்டர் மோகன் கூறியுள்ளார்.
விழுப்புரம்,
விழுப்புரத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறையின் சார்பில் கொரோனா நோய் தொற்று தடுப்பிற்கான 29-வது தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, டாக்டர் லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் கலெக்டர் மோகன் பேசியதாவது:-
இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து கடந்த 3 மாத இடைவெளிக்குப்பின் கொரோனா பாதிப்பு தற்போது அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, டெல்லி, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் தொற்று அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்திலும் கொரோனா தொற்று மீண்டும் தலைதூக்கி வருகிறது.
நோய் தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் பல்வேறு போர்க்கால நடவடிக்கைகளை தமிழக முதல்-அமைச்சர் மேற்கொண்டு வருகிறார்.
2,07,036 தடுப்பூசி
அதன்படி நோய்த்தொற்றிலிருந்து ஒவ்வொருவரும் முழுமையாக பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி ஒன்றே பாதுகாப்பானதாகும். எனவே அனைவரும் இரண்டு நிலை தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள வேண்டும் என்பது அரசின் நோக்கமாகும். அதனடிப்படையில் தற்போது இந்த தடுப்பூசி முகாம் தொடங்கப்பட்டுள்ளது.
எனவே இதுநாள் வரை யாரேனும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் இருந்தால் தவறாமல் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். அதேபோல், முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தவில்லையென்றால் இம்முகாமில் 2-ம் நிலை தடுப்பூசியும், இதேபோல் பூஸ்டர் தடுப்பூசியையும் செலுத்திக்கொள்ளலாம்.
விழுப்புரம் மாவட்டத்திற்கு 2,07,036 தடுப்பூசி மருந்துகள் தயார் நிலையில் உள்ளன. 1,040 முகாம்களில் தற்போது தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது என்று அவர் பேசினார்.
முகாமில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், நகரமன்ற தலைவர் சக்கரை தமிழ்ச்செல்வி, நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா, நகர்நல அலுவலர் டாக்டர் பாலசுப்பிரமணியன், தாசில்தார் ஆனந்தகுமார், வட்டார மருத்துவ அலுவலர் ஆர்த்தி, மகாராஜபுரம் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ஜோதி, நகரமன்ற கவுன்சிலர்கள் சசிரேகாபிரபு, புருஷோத்தமன், மணவாளன், தி.மு.க. நகர செயலாளர் சக்கரை, வார்டு செயலாளர் பிரபு உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story