தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 30 April 2022 10:18 PM IST (Updated: 30 April 2022 10:18 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 9176108888 என்ற ‘வாட்ஸ் அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கோவிலுக்கு அருகில் குப்பை கொட்டும் அவலம்


  ஆரணியில் உள்ள ஓட்டல்கள், வணிக நிறுவனங்களில் இருந்து குப்பைகள், கோழிக்கழிவுகளை கொண்டு வந்து ஆரணி புதுகாமூர் பகுதியில் உள்ள புத்திரகாமேட்டீஸ்வரர் கோவில் அருகில் உள்ள மயான பகுதியிலும், கமண்டல நதி ஆற்றுப்பகுதியிலும் கொட்டுகிறார்கள். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேற்கண்ட பகுதிகளில் குப்பை, கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும்.
-ராகவேந்திரன், ஆரணி.

சாலையில் வழிந்தோடும் குடிநீர்


  வேலூர்-ஆற்காடு சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்து வருகிறது. காகிதப்பட்டறையில் சாலை விரிவாக்கம் செய்யும்போது அங்குள்ள ஒரு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் வீணாக வெளியேறி சாலையில் வழிந்தோடுகிறது. அந்த வழியாக வாகனங்கள் அதிகமாக செல்வதால் போக்குவரத்துக்கு சிரமமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வீணாக வெளியேறும் குடிநீரை தடுத்து, உடைந்த குழாயை சரி செய்ய வேண்டும்.
-தாமரைகண்ணன், வேலூர்.

கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

பேரணாம்பட்டு ஒன்றியம் அரவட்லா மலைக் கிராமத்தில் வசிக்கும் மாணவர்கள், வியாபாரிகள், வேலைக்குச் செல்வோர் என பல தரப்பினரும் அருகில் உள்ள பேரணாம்பட்டு நகரத்துக்கு தினமும் பஸ்சில் வந்து செல்கிறார்கள். அவர்களுக்கு காலை 8 மணியளவில் ஒரு அரசு பஸ் இயக்கப்படுகிறது. தனியார் பஸ்கள் இயக்கப்படுவது இல்லை. அதன்பிறகு 5 மணிநேரம் வரை பஸ்சுக்காகக் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு மற்றும் தனியார் பஸ்களை கூடுதலாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ம.தங்கராஜ், அரவட்லா.


கொசுத்தொல்லை

  ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சி 17-வது வார்டு பகுதியில் கழிவுநீர் கால்வாய்களில் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. மாலை பொழுது வந்து விட்டால் கழிவுநீர் கால்வாயில் உள்ள கொசுக்கள் வீடுகளுக்குள் வந்து தொல்லை கொடுக்கிறது. கொசுக்கடியால் முதியோர், குழந்தைகள் தூங்க முடியாமல் அவதிப்படுகிறார்கள். 17-வது வார்டு பகுதியில் மாதத்துக்கு ஒரு முறையாவது கழிவுநீர் கால்வாய்களில் கொசு மருந்து அடிக்க வேண்டும்.
-சதிஷ்குமார், சோளிங்கர்.


வெயிலுக்கு தற்காலிக கொட்டகை


  திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரம் கற்பகம் 1-வது ரேஷன் கடையில் பொருட்கள் வினியோகிக்கும் நாளில் குடும்ப அட்டைதாரர்களின் கூட்டம் அதிகமாக உள்ளது. அவர்கள் அனைவரும் சுட்டெரிக்கும் வெயிலில் கால்கடுக்க வரிசையில் காத்திருந்து ரேஷன் பொருட்களை வாங்கி ெசல்கிறார்கள். வெயில் காலம் முடியும் வரை பொருட்கள் வழங்கும் நாளில் தற்காலிக கொட்டகை அமைப்பார்களா?
-பேராசிரியர் க.விஜயகாந்த், ஆரணி.

செல்போன் டவர் கிடைக்கவில்லை

  திருப்பத்தூரில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராச்சமங்கலம் கிராமத்தில் பி.எஸ்.என்.எல். சிக்னல் சரியாக கிடைக்கவில்லை. கிராமத்தில் செல்போன் டவர் இருந்தும் வெளியில் இருந்து செல்போனுக்கு பேசுவோருக்கு பெரும்பாலும் சிக்னல் கிடைப்பதில்லை. தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளதாகவே பதில் வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட தகவல் தொடர்பு நிறுவனம் நடவடிக்கை எடுக்குமா?
-எம்.எஸ்.நிருபன், ராச்சமங்கலம்.

போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா?


  வேலூர் சத்துவாச்சாரி 2-பேஸ் பகுதியில் 2, 5-வது பிரதான சாலையில் மரக்கன்றுகள் நட்டு, அதை ஆடு, மாடு மேயாமல் இருக்கவும், பாதுகாக்கவும் இரும்புக்கூண்டு அமைத்திருந்தனர். அதை, மர்மநபர்கள் யாரோ இரவில் திருடிச்சென்று விட்டனர். போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா?
-கிருஷ்ணன், வேலூர்.


Next Story