கள்ளக்குறிச்சியில் நாளை மறுநாள் நடக்கிறது மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் கலெக்டர் தகவல்


கள்ளக்குறிச்சியில் நாளை மறுநாள் நடக்கிறது மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 30 April 2022 4:54 PM GMT (Updated: 2022-04-30T22:24:49+05:30)

கள்ளக்குறிச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளதாக கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி  மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தடகளம் 

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் பொருட்டு மாவட்ட அளவிலான தடகளம் மற்றும் குழு விளையாட்டுப்போட்டிகள் நாளை மறுநாள்(செவ்வாய்க்கிழமை) கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. 
இதில் தடகளத்தில் கை, கால் ஊனமுற்றோர் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு 50 மீட்டர் ஓட்டம், 100 மீ. ஓட்டம், குண்டு எறிதல், சக்கர நாற்காலி ஆகிய போட்டிகளும், பார்வையற்றோருக்கு ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 50 மீ.ஓட்டம், 100 மீ.ஓட்டம், நின்ற நிலையில் தாண்டுதல், குண்டு எறிதல், மழுமைப்பந்து எறிதல் ஆகிய போட்டிகளும், மனநலம் பாதிக்கப்பட்ட ஆண்கள், பெண்களுக்கு 50 மீ.ஓட்டம், மழுமைப்பந்து எறிதல், 100 மீ.ஓட்டம், நின்ற நிலையில் தாண்டுதல், குண்டு எறிதல் ஆகிய போட்டிகளும், காதுகேளாத ஆண், பெண்களுக்கு 100 மீ.ஓட்டம், 200 மீ.ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், 400 மீ.ஓட்டம் ஆகிய போட்டிகளும் நடைபெறவுள்ளது.

மருத்துவச்சான்று

இப்போட்டிகளில் கலந்து கொள்வதற்கு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரால் வழங்கப்பட்ட மருத்துவச்சான்று மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலரால் வழங்கப்பட்ட சான்று, தலைமை அலுவலகத்தால் வழங்கப்படும் தடை இல்லாத சான்று ஆகியன அளிக்கப்பட வேண்டும். இப்போட்டியில் கலந்து கொள்ள வயது வரம்பு கிடையாது. மேலும் மாவட்ட போட்டிகளில் முதல் இடத்தை பெறுபவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள தகுதியானவர்களாவார்கள். 
மேலும் இப்போட்டிகளில் கலந்துகொண்டு முதல் 3 இடங்களில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் அதிக அளவில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story