விழுப்புரத்தில் பராமரிப்பின்றி வீணாகி வரும் ரெயில்வே குடியிருப்புகள் சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறுகிறது


விழுப்புரத்தில் பராமரிப்பின்றி வீணாகி வரும் ரெயில்வே குடியிருப்புகள் சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறுகிறது
x
தினத்தந்தி 30 April 2022 10:26 PM IST (Updated: 30 April 2022 10:26 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் பராமரிப்பின்றி வீணாகி வரும் ரெயில்வே குடியிருப்புகள் சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது.


விழுப்புரம், 

விழுப்புரத்தில் ரெயில்வே துறையில் பணியாற்றி வரும் அலுவலர்கள், ஊழியர்கள் குடும்பத்தினருடன் தங்குவதற்கு வசதியாக கிழக்கு புதுச்சேரி சாலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு ரெயில்வே காலனி, தெற்கு ரெயில்வே காலனி குடியிருப்புகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. 

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட இந்த குடியிருப்புகள் நாளடைவில் பராமரிப்பின்றி மிகவும் பழுதடைந்தது. அதை மீண்டும் சீரமைக்காததால் அந்த குடியிருப்புகளில் ரெயில்வே அலுவலர்கள், ஊழியர்கள் தங்க முடியாத நிலை ஏற்பட்டது. 

இதனால் பெரும்பாலான அலுவலர்கள், ஊழியர்கள் தாங்கள் தங்கியிருந்த குடியிருப்புகளை காலி செய்தனர். இதன் காரணமாக அந்த குடியிருப்புகள் மிகவும் பாழடைந்து சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறியது.

சீரமைக்கவில்லை

எனவே இந்த குடியிருப்புகளை சீரமைக்க வேண்டுமென சம்பந்தப்பட்ட ரெயில்வே நிர்வாகத்திற்கு ரெயில்வே அலுவலர்கள், ஊழியர்கள் பலரும் கோரிக்கை விடுத்தனர்.

இதன் பயனாக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தென்னக ரெயில்வே துறையின் சார்பில் ரெயில்வே ஊழியர்களுக்கு புதிய வடிவமைப்பில் வீடுகள் கட்டித்தரப்பட்டன. இந்த வீடுகள் வடக்கு ரெயில்வே காலனி பகுதியில் ஒரு அடுக்கில் 4 முதல் 6 வீடுகள் வரை என மொத்தம் 36 வீடுகள் கட்டப்பட்டன.

இதையடுத்து இந்த வீடுகள் ரெயில்வே அலுவலர்கள், ஊழியர்கள் குடியிருப்பதற்காக ஒதுக்கப்பட்டன. ஆனால் அந்த வீடுகளை அவ்வப்போது ரெயில்வே அதிகாரிகள் பார்வையிட்டு சீரமைக்காமல் விட்டு விட்டதால் தற்போது அந்த குடியிருப்புகளும் பழுதடைந்து வீணாகி வருகிறது. நல்ல நிலையில் உள்ள சில வீடுகளும் பாழடைந்து வருகிறது.

சமூகவிரோதிகள் அட்டகாசம்

இதன் காரணமாக அந்த குடியிருப்புகளும் ஒவ்வொன்றாக காலி செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு காலி செய்யப்படும் வீடுகளை சமூகவிரோதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு மது அருந்துவது, சூதாடுவது, கஞ்சா விற்பனை செய்வது போன்ற பலவித சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

எனவே ரெயில்வே அதிகாரிகள் இதில் தனிக்கவனம் செலுத்தி நல்ல நிலையில் இருக்கும் வீடுகளை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுப்பதோடு மட்டுமின்றி பாழடைந்த நிலையில் உள்ள வீடுகளை முற்றிலுமாக இடித்து அப்புறப்படுத்திவிட்டு புதிய குடியிருப்புகள் கட்டித்தர ஏற்பாடு செய்ய வேண்டும். 

அதேபோல் விழுப்புரம் நகர போலீசாரும் அவ்வப்போது வடக்கு, தெற்கு ரெயில்வே காலனி பகுதியில் ரோந்துப்பணி மேற்கொண்டு சமூகவிரோதிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Next Story