திருச்செந்தூர் செல்லும் ரெயிலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும்


திருச்செந்தூர் செல்லும் ரெயிலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும்
x
தினத்தந்தி 30 April 2022 4:59 PM GMT (Updated: 30 April 2022 4:59 PM GMT)

பாலக்காட்டில் இருந்து உடுமலை வழியாக திருச்செந்தூர் செல்லும் ரெயிலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

உடுமலை
பாலக்காட்டில் இருந்து உடுமலை வழியாக திருச்செந்தூர் செல்லும் ரெயிலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
பாலக்காடு-திருச்செந்தூர் ரெயில்
வெளியூர்களுக்கு குடும்பத்துடன் செல்லும் பயணிகள் பெரும்பாலும் ரெயில் பயணத்தையே விரும்புகின்றனர். அதனால் ரெயில்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது.
இந்த நிலையில் கேரள மாநிலம் பாலக்காடு ரெயில் நிலையத்தில் இருந்து பாலக்காடு டவுன், பொள்ளாச்சி, உடுமலை, பழனி, திண்டுக்கல், மதுரை, சாத்தூர், விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி வழியாக திருச்செந்தூர் வரை விரைவு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. மறுமார்க்கத்தில் திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், உடுமலை வழியாக பாலக்காடுக்கும் விரைவு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில்கள் சேவை தினசரி உள்ளது.
பயணிகள் கூட்டம்
பாலக்காட்டில் இருந்து காலை புறப்படும் ரெயில் பொள்ளாச்சி வழியாக உடுமலை ரெயில் நிலையத்திற்கு காலை 7.10 மணிக்கு வந்து செல்லும். இந்த ரெயிலில் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. அதுவும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை நாட்களில் பலர் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு செல்வதால் ரெயிலில் பயணிகள் கூட்டம் மிக அதிகமாக உள்ளது. இந்த ரெயிலில் 12 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
பாலக்காடு மற்றும் பொள்ளாச்சி ரெயில் நிலையங்களில் அதிக பயணிகள் ஏறுவதால், அந்த ரெயில் உடுமலைக்கு வரும் போதே பல பெட்டிகளில் பயணிகள் உட்கார இடம் கிடைக்காமல் நின்று கொண்டுவருகின்றனர். அதனால் உடுமலை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்லும் பயணிகளுக்கும் உட்காருவதற்கு இடம் கிடைக்காமல் நின்று கொண்டு செல்கின்றனர். இந்த ரெயில் பழனிக்கு சென்றதும், சில பயணிகள் இறங்கும்போது, நின்று கொண்டு பயணம் செய்த சிலருக்கு உட்கார இடம் கிடைக்கிறது. இந்த நிலையில் பழனி ரெயில் நிலையத்தில் இருந்து பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது.
கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும்
இந்த நிலையில் நேற்று காலை பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூர் செல்லும் ரெயில் உடுமலைக்கு வந்த போதே ரெயிலில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. பலர் நின்று கொண்டே வந்தனர். இந்த நிலையில் இந்த ரெயிலில் உடுமலை ரெயில் நிலையத்தில் இருந்து 250-க்கும் மேற்பட்ட பயணிகள் ஏறினர். மேலும் அவர்கள் நின்று கொண்டே சென்றனர். இதே நிலைதான் மறுமார்க்கத்தில் திருச்செந்தூரில் இருந்து வரும் ரெயிலிலும் உள்ளது.
அதனால் பயணிகள் வசதிக்காக பாலக்காடு-திருச்செந்தூர் ரெயிலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

Next Story