கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தப்படும்- கலெக்டர் செந்தில்ராஜ் பேட்டி


கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தப்படும்-  கலெக்டர் செந்தில்ராஜ் பேட்டி
x
தினத்தந்தி 30 April 2022 10:34 PM IST (Updated: 30 April 2022 10:34 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தப்படும் என மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் கூறினார்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தப்படும் என மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் கூறினார்.

மெகா தடுப்பூசி முகாம்
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று நடந்த 28-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாமை, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி செவிலியர் பயிற்சி பள்ளியில் கலெக்டர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
அவரை தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ, மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உள்பட அரசு அதிகாரிகள் பலரும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
பின்னர் கலெக்டர் செந்தில்ராஜ் கூறியதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் 763 மையங்களில் இன்று (அதாவது நேற்று) சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. மாவட்டத்தில் 95 சதவீதம் பேர் முதல் டோஸ் தடுப்பூசியும், 70 சதவீதம் பேர் 2-வது டோஸ் தடுப்பூசியும் செலுத்தி உள்ளனர். மேலும் 15 முதல் 18 வயது உடையவர்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசி 97 சதவீதம் பேருக்கும், 2-வது டோஸ் தடுப்பூசி 77 சதவீதம் பேருக்கும் செலுத்தப்பட்டு உள்ளது.

வீடு வீடாக.....
பொதுமக்கள் எளிதாக தடுப்பூசி செலுத்தி கொள்வதற்காக இந்த சிறப்பு முகாம்கள் நடக்கிறது. இதை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தப்படும். அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் வகையில் வருவாய்த்துறை, ஊரக மற்றும் மாநகராட்சி, அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள், தொழிலாளர் நலத்துறை, கல்வித்துறை, தன்னார்வலர்கள், காவல் துறை பணியாளர்கள் உள்பட பலர் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் பொற்செல்வன், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் நேரு, துணை முதல்வர் கலைவாணி, உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெபமணி, தடுப்பூசி திட்ட அலுவலர் டாக்டர் மாலையம்மாள், தூத்துக்குடி மாநகராட்சி நல அலுவலர் அருண்குமார், தூத்துக்குடி உதவி கலெக்டர் சுப்பிரமணியன், தாசில்தார் செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story