அரசு பொதுத்தேர்வுகளை எவ்வித புகார்களுக்கும் இடமின்றி சிறப்பான முறையில் நடத்த வேண்டும் கல்வித்துறை அலுவலர்களுக்கு விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி அறிவுரை
விழுப்புரம் மாவட்டத்தில் அரசு பொதுத்தேர்வுகளை எவ்வித சிறு புகார்களுக்கும் இடமின்றி சிறப்பான முறையில் நடத்த வேண்டும் என்று கல்வித்துறை அலுவலர்களுக்கு மாவட்ட கண்காணிப்பு அதிகாரி பழனிச்சாமி அறிவுரை கூறியுள்ளார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 96 தேர்வு மையங்களில் 21,675 மாணவ- மாணவிகளும், பிளஸ்-1 தேர்வை 96 மையங்களில் 23,582 மாணவ- மாணவிகளும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 120 மையங்களில் 25,577 மாணவ- மாணவிகளும் எழுத உள்ளனர்.
இந்த பொதுத்தேர்வு பணிக்காக நியமனம் செய்யப்பட்ட முதன்மை கண்காணிப்பாளர்கள், வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், துறை அலுவலர்கள், பறக்கும் படை உறுப்பினர்கள்,
வழித்தட அலுவலர்கள் ஆகியோருக்கான ஆய்வுக்கூட்டம் விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரியில் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பு அதிகாரியும் சென்னை ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளருமான பழனிசாமி தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-
அறிவுரைகள்
அறை கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் தேர்வு மையத்திற்கு காலை 8.45 மணிக்குள் செல்ல வேண்டும், பறக்கும் படை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் தேர்வு மையத்திற்கு தேர்வு தொடங்குவதற்கு முன்னதாக சென்று பின்னர் தேர்வு முடிந்த பிறகுதான் தேர்வு மையத்தில் இருந்து வெளியே செல்ல வேண்டும், தேர்வு மையத்திற்கு தேர்வர்கள் எண்ணிக்கைக்கேற்ப அறை கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டதை மாவட்ட கல்வி அலுவலரிடம் உறுதி செய்துகொள்ள வேண்டும்.
முதன்மை கண்காணிப்பாளர் துறை அலுவலருடன் இணைந்து அனைத்து அறை கண்காணிப்பாளர்களையும் அழைத்து தேர்வு பணி குறித்த விரிவான அறிவுரை வழங்கப்பட வேண்டும். தேர்வு மையத்திற்கு காவல்துறை பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
தேர்வு தொடங்குவதற்கு 2 நாட்களுக்கு முன்பு தேர்வு மையத்திற்கு சென்று அம்மையத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அறை, தேர்வறை, கழிவறைகள் மற்றும் இருக்கை வசதி, மின்வசதி, குடிதண்ணீர் வசதி ஆகியவை போதுமான அளவில் உள்ளனவா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
மேலும் தேர்வு மையத்தில் புகார் பெட்டி வைக்கப்பட வேண்டும். தேர்வு அறையில் துண்டுத்தாள், கழிவுத்தாள் இல்லாதது உறுதி செய்யப்பட வேண்டும்.
தேர்வு கட்டுப்பாட்டு அறையில் சரியான நேரத்தை காட்டக்கூடிய கடிகாரம் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மொத்தத்தில் இத்தேர்வு பணிகளில் எவ்வித சிறு புகார்களுக்கும் இடமின்றி தேர்வை சிறப்பான முறையில் நடத்தி முடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கிருஷ்ணப்பிரியா, மாவட்ட கல்வி அலுவலர்கள் விழுப்புரம் சுந்தரமூர்த்தி, திண்டிவனம் கிருஷ்ணன், செஞ்சி கலைவாணி ஆகியோர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story