கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் 30 நாட்டுத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன போலீஸ் சூப்பிரண்டு தகவல்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் 30 நாட்டுத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் 30 நாட்டுத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் தெரிவித்தார்.
30 துப்பாக்கிகள் பறிமுதல்
கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சட்ட விரோதமாக துப்பாக்கி வைத்திருப்பவர்கள் வருகிற மே 10-ந் தேதிக்குள் தாமாக முன் வந்து துணை போலீஸ் சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர், ஊர் தலைவர் ஆகியோரிடம் ஒப்படைக்கலாம். அவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்பட மாட்டாது. அப்படி ஒப்படைப்பவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட மாட்டாது.
வருகிற 10-ந் தேதிக்கு பிறகு போலீசார் நடத்தும் சோதனையில் துப்பாக்கிகள் யாரேனும் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 30 நாட்டுத்துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதில் 28 துப்பாக்கிகளை தாமாக முன் வந்து ஒப்படைத்து உள்ளனர்.
110 பேர் கைது
இந்த நாட்டுத்துப்பாக்கிகளை தயாரித்து கொடுப்பவர்கள் யார்? என விசாரித்து வருகிறோம். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் 12 ஆயிரம் கிலோ குட்கா, 49 கிலோ கஞ்சா, 21 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக 110 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அனைத்து உட்கோட்டங்களிலும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. கஞ்சா, குட்கா கடத்துபவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்பவர்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக காவல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் தலைமையில் நடந்தது. இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் விவேகானந்தன், சங்கு, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் விஜயராகவன், தங்கவேல், அலெக்சாண்டர், கிருத்திகா மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story