மக்கள் பிரதிநிதிகள் கட்சி பேதமின்றி பணியாற்ற வேண்டும்
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் கட்சி பேதமின்றி அனைத்து மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்று அமைச்சர் காந்தி பேசினார்.
ராணிப்பேட்டை
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் கட்சி பேதமின்றி அனைத்து மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்று அமைச்சர் காந்தி பேசினார்.
நகர்நல மைய கட்டிடம்
ராணிப்பேட்டை நகராட்சி துரைசாமி லேஅவுட் பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிய நகர் நல மைய கட்டிடம் பணிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி மற்றும் ராணிப்பேட்டை நகராட்சியில் ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் வாங்கப்பட்டுள்ள புதிய கழிவுநீர் அகற்றும் வாகனத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்துகொண்டு புதிய நகர்நல மைய கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டி வைத்தும், புதிய கழிவுநீர் அகற்றும் வாகனத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தும் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கட்சி பேதமின்றி...
ராணிப்பேட்டை நகராட்சியில் புதிய திட்டப்பணியினை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். குறுகிய காலத்தில் புதிய திட்டத்தை உடனுக்குடன் தீர்மானம் நிறைவேற்றி செயல்படுத்திய நகரமன்ற தலைவர், துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.
இதன் மூலம் இந்தப்பகுதியினை சுற்றியுள்ள 5 வார்டுகளை சேர்ந்த சுமார் 5 ஆயிரம் மக்கள் பயன்பெறுவார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் கட்சி பேதமின்றி அனைத்து மக்களுக்காகவும் பணியாற்ற வேண்டும். பாரபட்சமின்றி செயல்பட வேண்டும்.
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் அரசு, மக்களின் அரசு. பல தலைவர்களும் பாராட்டும் வகையில் தமிழகத்தை வழி நடத்தி வருகிறார்.
அந்த வகையில் மக்கள் பிரதிநிதிகள், மக்களின் அடிப்படை பிரச்சினைகளை கேட்டறிந்து, உடனுக்குடன் செயல்பட்டு, அவர்களின் குறைகளை களைந்து, அனைவரும் சந்தோஷமாக வாழும் வகையில் பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மருத்துவ முகாம்
அதைத்தொடர்ந்து வாலாஜா ஒன்றியம், நவ்லாக் ஊராட்சி புளியங்கண்ணு அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வந்த, கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம், வட்டார சுகாதார திருவிழா மருத்துவ முகாமை அமைச்சர் காந்தி பார்வையிட்டார்.
தொடர்ந்து 10 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தினையும், 6 பள்ளி மாணவர்களுக்கு முதல்-அமைச்சரின் பள்ளி சிறார்களுக்கான கண்ணொளி காப்போம் திட்டத்தில், இலவச கண் கண்ணாடிகளையும் வழங்கினார்.
நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை நகரமன்ற தலைவர் சுஜாதா வினோத், துணைத்தலைவர் ரமேஷ்கர்ணா, வாலாஜா ஒன்றியக்குழு தலைவர் சேஷா வெங்கட், நகராட்சி ஆணையாளர் ஏகராஜ், வட்டார மருத்துவ அலுவலர் சாந்தி, நவ்லாக் ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி குமார், நகரமன்ற உறுப்பினர்கள் வினோத், குமார், அப்துல்லா, கோபிகிருஷ்ணன், சங்கர், ஜீவமணி, அரசு வழக்கறிஞர் ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story