ஒரு நபர் குழு விசாரணை தொடங்கியது
தஞ்சையில், தேரில் மின்சாரம் தாக்கி 11 பேர் பலியான விபத்து குறித்து அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவின் விசாரணை அலுவலர் குமார் ஜெயந்த் தனது விசாரணையை தொடங்கினார்.
தஞ்சாவூர்;
தஞ்சையில், தேரில் மின்சாரம் தாக்கி 11 பேர் பலியான விபத்து குறித்து அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவின் விசாரணை அலுவலர் குமார் ஜெயந்த் தனது விசாரணையை தொடங்கினார்.
மின்சாரம் தாக்கி 11 பேர் பலி
தஞ்சையை அடுத்த களிமேடு கிராமத்தில் அப்பர் சதயவிழா கடந்த 26-ந் தேதி தொடங்கியது. அன்று இரவு நடந்த தேர் வீதிஉலாவின்போது தாழ்வாக சென்ற உயர் மின்னழுத்த கம்பியில் தேரின் மேல்பகுதி உரசியதால் மின்விபத்து ஏற்பட்டு மின்சாரம் தாக்கியதில் 3 சிறுவர்கள் உள்பட 11 பேர் பலியானார்கள்.
மேலும் படுகாயம் அடைந்த 17 பேர் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ஒரு நபர் குழு விசாரணை தொடங்கியது
இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த்தை ஒரு நபர் குழு அலுவலராக நியமித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி ஒருநபர் குழு அலுவலர் குமார் ஜெயந்த் நேற்று தஞ்சைக்கு வந்து தனது விசாரணையை தொடங்கினார்.
தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த அவர், கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா மற்றும் வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்வாரியத்துறை உயர் அலுவலர்களுடன் களிமேடு தேர் விபத்து குறித்து விசாரணை நடத்தினார். பின்னர் அவர் களிமேடு கிராமத்திற்கு நேரில் சென்று மின்விபத்து ஏற்பட்ட இடத்தையும், தீயில் எரிந்த தேரையும் பார்வையிட்டார்.
அதிகாரிகள் விளக்கம்
அப்போது தேர் அலங்கரிக்கப்பட்டு மின்விளக்குகளால் ஜொலித்த புகைப்படத்தை குமார் ஜெயந்த் கையில் வைத்துக்கொண்டு தேரில் அலங்காரம் எந்த உயரத்திற்கு செய்யப்பட்டு இருந்தது? அலங்காரம் மூங்கில் குச்சி, இரும்பு கம்பிகளால் செய்யப்பட்டு இருந்ததா? எப்படி விபத்து ஏற்பட்டு மின்சாரம் தாக்கியது? என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
அதற்கு கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் விளக்கம் அளித்தனர். தேர் எப்படி திருப்பப்பட்டது என விளக்கம் அளித்த போலீஸ் சூப்பிரண்டு, தார்ச்சாலையில் தேர் சக்கரம், ஜெனரேட்டர் சக்கரத்தின் தடம் பதிந்து இருந்ததை காண்பித்தார்.
மடக்கும் வசதி
இது தொடர்பான புகைப்படம் மட்டுமின்றி விபத்திற்கு பிறகு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எல்லாம் உடனே தனக்கு வேண்டும் என குமார் ஜெயந்த் கூறினார். பின்னர் அவர் விபத்தை நேரில் பார்த்த தனசேகர், கண்ணகி, தாஸ், பாலாமணி ஆகியோரிடம் எப்படி விபத்து நடந்தது? என கேட்டறிந்தார். மேலும் அவர், மின் வயர், மின் கம்பிகள் அருகே வரும்போது தேரின் மேல் பகுதியை மடக்கக்கூடிய வசதி இந்த தேரில் இருந்ததா? என கேட்டார்.
அப்போது தேரில் மடக்கக்கூடிய வசதி இருந்தது எனவும், மற்ற வீதிகளில் வந்தபோது முறையாக மடக்கி தேர் இழுத்து வரப்பட்டது எனவும், இங்கே மேல்பகுதியை மடக்காததால் விபத்து ஏற்பட்டது எனவும் அவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து தேர் இழுத்து வரப்பட்ட வீதியில் நடந்து சென்று குமார் ஜெயந்த் ஆய்வு மேற்கொண்டார்.
மின்சாரம் நிறுத்தப்பட்டதா?
மின்சார வாரிய ஊழியரிடம் மின்சாரம் நிறுத்தப்பட்டதா? என கேட்டபோது, மக்கள் மின்சாரத்தை நிறுத்த சொல்லி இருந்தால் நிறுத்தி இருப்போம். யாரும் எதுவும் சொல்லாததால் மின்சாரத்தை நிறுத்தவில்லை. இது குறைந்த மின்னழுத்தம் உள்ளது என கூறினார்.
எதுவாக இருந்தாலும் மின்சாரம் பாய வாய்ப்பு இருக்கும் என குமார் ஜெயந்த் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து அப்பர் மடத்தையும் அவர் பார்வையிட்டார்.
பேட்டி
பின்னர் ஒரு நபர் குழு அலுவலர் குமார் ஜெயந்த் நிருபர்களிடம் கூறுகையில், களிமேடு கிராமத்தில் நடந்த விபத்து தொடர்பாக முதல்கட்ட விசாரணை தொடங்கியுள்ளது. மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. நாளை(அதாவது இன்று) காலை 9 மணி முதல் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நான் இருப்பேன்.
விபத்து தொடர்பாக தகவல் தெரிவிக்க விரும்புபவர்கள், அலுவலர்கள் நேரில் வந்து தெரிவிக்கலாம். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை தேவைப்பட்டால் நேரில் வந்து சந்திப்போம். இந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து ஒரு அறிக்கை தயார் செய்யப்படும். வரும் காலத்தில் இதுபோன்ற விபத்து நடைபெறாமல் இருப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் அறிக்கையாக அரசுக்கு சமர்ப்பிக்கப்படும் என்றார்.
Related Tags :
Next Story