38 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
மதுரையில் நடந்த சிறப்பு முகாம்களில் 38 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.
மதுரை,
மதுரையில் நடந்த சிறப்பு முகாம்களில் 38 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.
கொரோனா பாதிப்பு
கடந்த 2 ஆண்டுகளாக உலகையே முதல் அலை, 2-ம் அலை என அச்சுறுத்தி வந்த கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்தது. தடுப்பூசிகள் அதிக அளவில் செலுத்தியதன் விளைவாகவே கொரோனா பாதிப்பு குறைந்ததாக மருத்துவத்துறையினர் தெரிவித்தனர்.
இந்தநிலையில் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கொரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து வருகிறது. அதன்படி, தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு படிப்படியாக உயர்ந்து வருகிறது. இதனால், முககவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு முக கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் எனவும் தமிழக அரசு எச்சரித்துள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து முககவசம் அணியாமல் செல்லும் நபர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர்.
1,500 இடங்களில்...
மதுரையில் நேற்று 1500 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் நடந்தது. இதில் சுமார் 38 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று மாலை நிலவரப்படி, மதுரையில் 86.3 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 2-ம் தவணை தடுப்பூசி 60.5 சதவீதம் பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. இதுபோல், 42 ஆயிரம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
வேண்டுகோள்
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், "தமிழகம் மட்டுமின்றி மற்ற மாநிலங்களில் கொரோனா பரவல் வேகம் அதிகரித்துள்ளது. இதுபோல் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக உயர்ந்து வருகிறது. எனவே கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.
மதுரையை பொறுத்தமட்டில் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்த மக்களுக்கு ஆர்வம் குறைந்து விட்டது. மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறையின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் பலனில்லை. சம்பந்தப்பட்ட நபர்களை செல்போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால் கூட அவர்கள் வரமறுக்கின்றனர்.
இப்போதைய காலகட்டத்தில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் இருப்பது நல்லதல்ல. கொரோனா பரவல் படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், அனைவரும் சரியான நேரத்தில் தடுப்பூசியை செலுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story