சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் கிடைத்த ஆதாரங்கள் குறித்து பசவராஜ் பொம்மை விளக்கம் அளிக்க வேண்டும்- சித்தராமையா
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் கிடைத்த ஆதாரங்கள் குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வலியுறுத்தி உள்ளார்.
பெங்களூரு:
பெங்களூருவில் நேற்று எதிாக்கட்சி தலைவர் சித்தராமையா நிருபர்களிடம் கூறியதாவது:-
பசவராஜ் பொம்மை விளக்கம்
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு குறித்து சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்னும் விசாரணை அறிக்கையை அரசிடம் போலீசார் வழங்கவில்லை. அதற்குள் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி தேர்வை ரத்துசெய்திருப்பது ஏன்?. அரசிடம் போலீசார் விசாரணையை அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறார்கள். அப்படியென்றால், அறிக்கையில் இருப்பது என்ன?.
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வை ரத்து செய்வதற்கான ஆதாரங்கள் அரசுக்கு கிடைத்துள்ளதா? அதுபற்றி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை விளக்கம் அளிக்க வேண்டும். போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா, அந்த பதவியில் இருக்க தகுதி இல்லை. உடனடியாக அவரைமந்திரி பதவியில் இருந்து நீக்க வேண்டும்.
அரக ஞானேந்திரா ராஜினாமா
18 நாட்களுக்கு பின்பு தான் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் மூளையாக செயல்பட்ட திவ்யாவை கைதுது செய்திருந்தார்கள். அவர் கைது செய்யப்பட்டதும் தேர்வை ரத்து செய்தது ஏன்?. திவ்யா போலீசாரிடம் என்ன கூறி இருக்கிறார். இந்த முறைகேட்டின் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பது பற்றி போலீசாரிடம் கூறி உள்ளாரா?. முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இதுபற்றி மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் முறைகேடு நடந்திருப்பதை ஒப்புக் கொண்டுள்ளதால், போலீஸ் மந்திரி பதவியை அரக ஞானேந்திரா உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். இந்த வழக்கின் விசாரணை நியாயமாக நடைபெறுவதற்கு அரக ஞானேந்திராவை மந்திரி பதவியில் இருந்து நீக்கினால் மட்டுமே, போலீசாரால் நேர்மையாக விசாாிக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story