ஈரோட்டில் மாவட்ட அளவிலான கபடி போட்டி; 115 அணிகள் பங்கேற்பு


ஈரோட்டில் மாவட்ட அளவிலான கபடி போட்டி; 115 அணிகள் பங்கேற்பு
x
தினத்தந்தி 1 May 2022 3:37 AM IST (Updated: 1 May 2022 3:37 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் நடந்த மாவட்ட அளவிலான கபடி போட்டியில் 115 அணிகள் பங்கேற்றன.

ஈரோடு
ஈரோட்டில் நடந்த மாவட்ட அளவிலான கபடி போட்டியில் 115 அணிகள் பங்கேற்றன.
கபடி போட்டி
தமிழ்நாடு மாநில அமெச்சூர் கபடி கழகம் சார்பில், ஈரோடு மாவட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் சாம்பியன் ஷிப் கபடி போட்டி ஈரோடு வ.உ.சி. பூங்கா விளையாட்டு மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட விளையாட்டு அதிகாரி சதீஷ்குமார் தலைமை தாங்கி போட்டிகளை தொடங்கி வைத்தார்.
இதில் ஈரோடு மாவட்ட கால்பந்து கழக தலைவர் பாலசுப்பிரமணி, தேசிய கபடி வீரரும், ஓய்வுபெற்ற வருமானவரித்துறை அதிகாரியுமான சுப்பிரமணியம், தமிழ்நாடு கபடி கழக பொருளாளர் சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
பரிசளிப்பு விழா
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ஆண்கள் அணியினரும், 15 பெண்கள் அணியினரும் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். போட்டிகள் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) தொடர்ந்து நடக்கிறது. அதைத்தொடர்ந்து மாலையில் பரிசளிப்பு விழா நடக்கிறது. விழாவில் வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு, வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசு மற்றும் கோப்பை வழங்குகிறார்.
ஆண்கள் பிரிவில் முதல் இடம் பெறும் அணிக்கு ரூ.11 ஆயிரத்து 111 மற்றும் கோப்பை, 2-ம் இடம் பெறும் அணிக்கு ரூ.7 ஆயிரத்து 777 மற்றும் கோப்பை, 3-ம் இடம் மற்றும் 4-ம் இடம் பெறும் அணிக்கு ரூ.4 ஆயிரத்து 444 மற்றும் கோப்பைகள் வழங்கப்படுகிறது. இதேபோல் பெண்கள் பிரிவில் முதல் இடம் பெறும் அணிக்கு ரூ.5 ஆயிரத்து 555 மற்றும் கோப்பை, 2-ம் இடம் பெறும் அணிக்கு ரூ.3 ஆயிரத்து 333 மற்றும் கோப்பை, 3-ம் இடம் மற்றும் 4-ம் இடம் பெறும் அணிக்கு ரூ.1,111 மற்றும் கோப்பை வழங்கப்படுகிறது.

Next Story