கீழ்பவானி வாய்க்கால் கான்கிரீட் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த மாநாட்டு தீர்மானம் அமைச்சர் துரைமுருகனிடம் வழங்கப்பட்டது


கீழ்பவானி வாய்க்கால் கான்கிரீட் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த மாநாட்டு தீர்மானம் அமைச்சர் துரைமுருகனிடம் வழங்கப்பட்டது
x
தினத்தந்தி 1 May 2022 3:45 AM IST (Updated: 1 May 2022 3:45 AM IST)
t-max-icont-min-icon

கீழ்பவானி வாய்க்கால் கான்கிரீட் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த மாநாட்டு தீர்மானங்கள் அமைச்சர் துரைமுருகனிடம் வழங்கப்பட்டது.

சென்னிமலை
கீழ்பவானி வாய்க்கால் கான்கிரீட் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த மாநாட்டு தீர்மானங்கள் அமைச்சர் துரைமுருகனிடம் வழங்கப்பட்டது. 
எதிர்ப்பு
கீழ்பவானி வாய்க்கால், அதன் பகிர்மான மற்றும் கிளை வாய்க்கால்களில் சீரமைப்பு பணிகளை தொடங்குவதற்காக தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகளை தொடங்க இருந்தது. முதல் கட்டமாக பிரதான, பகிர்மானம் மற்றும் கிளை வாய்க்கால்களில் உள்ள மொத்த தூரத்தில் மூன்றில் ஒரு பகுதிக்கு கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை நிறைவேற்றினால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதுடன் வறட்சியும் ஏற்படும் என ஒரு தரப்பு விவசாயிகள் இந்த திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்த திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள பாசன பகுதி விவசாயிகள் பல்வேறு இடங்களில் போராட்டங்களையும் நடத்தி வந்தனர். 
கவன ஈர்ப்பு மாநாடு
மேலும் இந்த திட்டத்தை ரத்து செய்யக்கோரி கடந்த 24-ந் தேதி ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்ட கவன ஈர்ப்பு மாநாடும் நடைபெற்றது.
இந்த மாநாட்டில், கான்கிரீட் அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும், போர்க்கால அடிப்படையில் முக்கிய கால்வாய், கிளை கால்வாய்களை தூர் வாரி கடைமடை வரை தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், மண் கால்வாயை மண்ணால் மட்டுமே சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அமைச்சர் துரைமுருகனுடன் நேரில் சந்திப்பு
இந்த நிலையில், தி.மு.க சுற்றுச்சூழல் அணியின் மாநில தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி தலைமையில் கான்கிரீட் எதிர்ப்பு இயக்கத்தை சேர்ந்த அறச்சலூர் செ.நல்லசாமி, மு.ரவி, பனியம்பள்ளி சிவக்குமார், அய்யம்பாளையம் செந்தில், சொக்கநாதபாளையம் கோவிந்தராஜ், ஊராட்சி தலைவர்களான அனுமன்பள்ளி கிருஷ்ணமூர்த்தி, கண்டியங்காட்டுவலசு மகாசாமி, நத்தக்காடையூர் செந்தில்குமார் மற்றும் கீரணூர், மறவபாளையம் ஆகிய ஊராட்சிகளின் தலைவர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் ஆகியோர் தமிழக நீர்ப்பாசன துறை அமைச்சர் துரைமுருகனை சென்னையில் உள்ள அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் மாநாட்டில் கலந்து கொண்ட விவசாயிகளின் விபரங்கள் அடங்கிய ஆவணங்களை வழங்கி, கான்கிரீட் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்கள். 
அப்போது அமைச்சர் துரைமுருகன், இந்த கோரிக்கைகள் குறித்து முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று எந்த விவசாயிக்கும் பாதிப்பு இல்லாத வகையில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததாக விவசாயிகள் தெரிவித்தனர். 
முன்னதாக விவசாயிகள் தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமியையும் சென்னையில் உள்ள அவரது வீட்டில் நேரில் சந்தித்து மாநாட்டு தீர்மானங்களை வழங்கினார்கள்.

Next Story