திராவக வீச்சுக்கு ஆளான இளம்பெண் நீதிபதி முன்பு மரண வாக்குமூலம்
பெங்களூருவில் திராவக வீச்சுக்கு ஆளான இளம்பெண் நீதிபதி முன்பு மரண வாக்குமூலம் அளித்து உள்ளார்.
பெங்களூரு:
திராவகம் வீச்சு
பெங்களூரு ஹெக்கனஹள்ளி கிராசில் 25 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவர் காமாட்சிபாளையா அருகே சுங்கதகட்டேயில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த மாதம் (ஏப்ரல்) 28-ந் தேதி நிதி நிறுவன வாசலில் வைத்து இளம்பெண் மீது நாகேஷ் (வயது 29) என்ற வாலிபர் திராவகம் வீசினார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த இளம்பெண் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தனது காதலை ஏற்க மறுத்ததால் இளம்பெண் மீது நாகேஷ் திராவகம் வீசியது தெரியவந்துள்ளது. தற்போது தலைமறைவாக உள்ள அவரை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஆஸ்பத்திரிக்கு நேற்று நீதிபதி சென்று இளம்பெண்ணிடம் மரண வாக்குமூலம் பெற்றார். அந்த வாக்குமூலத்தில் இளம்பெண் கூறியதாவது:-
காதலை ஏற்கவில்லை
எனது தந்தை வீட்டின் முன்பு காய்கறி கடை நடத்தி வருகிறார். எனது அம்மா லட்சுமம்மா வீட்டில் உள்ளார். அக்கா பிரீத்தி சாப்ட்வேர் என்ஜினீயர். தம்பி விஷ்வா கல்லூரியில் படித்து வருகிறான். நான் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்தேன். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு எனது பெரியம்மா வீட்டில் நாகேஷ் குடும்பத்தினர் வாடகைக்கு இருந்தனர். அப்போதே நாகேஷ் என்னிடம் என்னை காதலிப்பதாக கூறினார். ஆனால் நான் அவரது காதலை ஏற்கவில்லை.
அதன்பின்னர் அவரும் காதல் பற்றி என்னிடம் பேசவில்லை. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக என்னை காதலிக்கும்படியும், திருமணம் செய்து கொள்ளும்படியும் கூறி நாகேஷ் தொடர்ந்து தொல்லைகள் கொடுத்து வந்தார். ஆனாலும் அவரது காதலை ஏற்க மறுத்து விட்டேன். கடந்த 27-ந் தேதி எனது அலுவலகத்திற்கு வந்த நாகேஷ் என்னை நீ காதலித்து திருமணம் செய்ய வேண்டும். நீ என்னை காதலித்து திருமணம் செய்யாவிட்டால், எனக்கு கிடைக்காத உன்னை யாருக்கும் கிடைக்க விட மாட்டேன் என்று மிரட்டினார். மேலும் நான் வேலை செய்து வரும் நிதி நிறுவன மேலாளரிடமும் நான் என்ன செய்கிறேன் பார் என்று கூறி மிரட்டல் விடுத்தார்.
கொலை செய்யும் நோக்கில்...
இந்த நிலையில் கடந்த 28-ந் தேதி காலை என்னை அலுவலகத்தில் விட்டுவிட்டு தந்தை சென்றார். நான் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் நின்றேன். அப்போது கையில் ஒரு கவரில் எதையோ எடுத்து கொண்டு நாகேஷ் என்னை நோக்கி வந்தார். இதனால் நான் அங்கிருந்து தப்பி ஓட முயன்றேன். ஆனாலும் கவரில் கொண்டு வந்ததை என் மீது நாகேஷ் வீசினார்.
இதில் எனது கை, கால், முகத்தில் பலத்த காயம் உண்டானது. அப்போது தான் என் மீது நாகேஷ் திராவகம் வீசியது தெரிந்தது. பின்னர் அவர் அங்கிருந்து ஓடிவிட்டார். இதன்பின்னர் எனது தந்தைக்கு செல்போனில் தொடர்பு கொண்டு நடந்த சம்பவம் பற்றி கூறினேன். அவர் உடனடியாக வந்து என்னை ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். என்னை கொலை செய்யும் நோக்கில் தான் என் மீது நாகேஷ் திராவகம் வீசினார்.
இவ்வாறு அந்த இளம்பெண் கூறியுள்ளார்.
இதற்கிடையே அந்த இளம்பெண் தனது தாயிடம் நாகேசுக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் அதை என் கண் முன்பு கொடுக்க வேண்டும். என்னை போன்ற நிலை வேறு எந்த பெண்ணுக்கும் வர கூடாது என்று கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் தனது தந்தைக்கும் இளம்பெண் தைரியம் கூறியதாகவும் சொல்லப்படுகிறது.
கைது
இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு நாகேசின் பெற்றோர், அவரது அண்ணன் ரமேஷ் பாபு, நாகேசின் நண்பர்கள் சிலரை பிடித்து சென்று போலீசார் விசாரணை நடத்தியதாகவும், நாகேசின் அண்ணன் ரமேஷ் பாபுவை போலீசார் கைது செய்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை சந்தித்து உடல்நலம் விசாரிக்க பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் கமல்பந்த், மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் சஞ்சய் எம்.பட்டீல் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் நேற்று ஆஸ்பத்திரிக்கு சென்றனர். ஆனால் இளம்பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததால் அவர்களால் இளம்பெண்ணை பார்க்க முடியவில்லை.
நாகேஷ் விரைவில் கைது செய்யப்படுவார்
பெங்களூரு போலீஸ் கமிஷனர் கமல்பந்த் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், ‘இளம்பெண் மீது திராவகம் வீசிவிட்டு தலைமறைவாக உள்ள நாகேசை பிடிக்க மேலும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது உள்ளது. நாகேஷ் தமிழ்நாட்டில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்து உள்ளது. இதனால் அவரை பிடிக்க அங்கு ஒரு தனிப்படை சென்றுள்ளது. மேலும் சில மாநிலங்களிலும் தனிப்படை போலீசார் முகாமிட்டு நாகேசை தேடிவருகின்றனர். அவர் விரைவில் கைது செய்யப்படுவார்’ என்றார்.
2 மாதங்களாவது சிகிச்சை அளிக்க வேண்டும்
திராவகம் வீச்சில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டரான அரவிந்த் என்பவர் கூறும்போது, ‘பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு குறைந்தது 2 மாதங்களாவது ஆஸ்பத்திரியில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டி உள்ளது. அவரது முகத்தில் பலத்த தீக்காயம் ஏற்பட்டு உள்ளது. இதற்காக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளது. பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து அந்த பெண்ணின் உடல்நலனை தொடர்ந்து கண்காணிப்போம்’ என்றார்.
Related Tags :
Next Story