தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை
தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.
அரியலூர்:
வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் 2022-23-ம் கல்வியாண்டிற்கான குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி, 25 சதவீத இடஒதுக்கீட்டில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள 82 சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் 1,312 இடங்களுக்கு மாணவ-மாணவிகள் சேர்க்கப்படவுள்ளனர். அதன்படி பள்ளிகளில் நுழைவு வகுப்புகளான எல்.கே.ஜி., முதலாம் வகுப்பு சேர விரும்பும் மாணவ-மாணவிகளை சார்ந்த பெற்றோர்கள் rte.tnschools.gov.in என்ற இணைய தளத்தின் வழியாக வருகிற 18-ந்தேதிக்குள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலகங்கள், அந்தந்த பள்ளிகள் மற்றும் அரசு இ-சேவை மையங்களில் விண்ணப்பத்தை பதிவேற்றலாம். விண்ணப்பத்துடன் மாணவ-மாணவிகளின் புகைப்படம், சாதி சான்றிதழ், பிறப்பு சான்றிதழ், தாய் தந்தையரின் ஆதார் அட்டைகள், இருப்பிட சான்று, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வருமான சான்று ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும். இதற்கு ரூ.2 லட்சத்திற்குள் வருவாய் உள்ள வாய்ப்பு மறுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், முஸ்லிம்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர் மரபினர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம்.
இந்த தகவல் அரியலூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story