கோர்ட்டுகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ஆணையம் - முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை


கோர்ட்டுகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ஆணையம் - முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை
x
தினத்தந்தி 1 May 2022 4:12 AM IST (Updated: 1 May 2022 4:12 AM IST)
t-max-icont-min-icon

கோர்ட்டுகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

பசவராஜ் பொம்மை பங்கேற்பு

  டெல்லியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் முதல்-மந்திரிகள் மற்றும் ஐகோர்ட்டு தலைமை நீதிபதிகள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்க நேற்று முன்தினம் இரவே பெங்களூருவில் இருந்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை டெல்லி சென்றிருந்தார். பின்னர் நேற்று பிரதமர் தலைமையில் நடந்த மாநாட்டில் பசவராஜ் பொம்மை கலந்து கொண்டார்.

  இந்த மாநாடு முடிந்ததும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

ஆணையம் அமைப்பு

  பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த மாநாட்டில் கோா்ட்டுகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து முதல்-மந்திரிகளும், ஐகோர்ட்டு தலைமை நீதிபதிகளும் விரிவாக ஆலோசித்தனர். அதன்படி, மாநிலத்தில் உள்ள கோர்ட்டுகளிலும் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

  இதற்காக கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையிலேயே ஆணையம் அமைக்கப்பட உள்ளது. இந்த ஆணையத்தில் முதல்-மந்திரி, சட்டத்துறை மந்திரி, மூத்த அரசு அதிகாரிகள் இடம் பெறுவார்கள். இந்த ஆணையம் தான் கோர்ட்டுகளில் அடிப்படை வசதிகளை மேற்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசித்து, அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பார்கள்.

நீதிபதி பணி இடங்கள்...

  மாநிலத்தில் கோர்ட்டுகளுக்கு தேவையான அனைத்து விதமான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க அரசு தயாராக உள்ளது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து கோர்ட்டுகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தான் மாநாட்டிலும் முடிவு எடுக்கப்பட்டு இருந்தது. மிக வேகமாக எந்த ஒரு வழக்கிலும் விசாரணையை முடித்து கோர்ட்டு மூலமாக நியாயம் கிடைக்க வேண்டும், இதற்காக கோர்ட்டு விசாரணையை பலப்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.

  நீதி விரைவாக கிடைக்க வேண்டும் என்பதுடன், நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் வேகமாக வளர வேண்டும் என்பது குறித்தும் மாநாட்டில் ஆலோசிக்கப்பட்டது. மாநிலத்தில் எங்கெல்லாம் நீதிபதி பணிகள் காலியாக இருக்கிறதோ, அங்கு இடஒதுக்கீடு அடிப்படையில் நீதிபதிகள் பணி இடங்கள் நிரப்பப்படும். இதற்காக ஒரு நீதிபதி ஓய்வு பெறும் 6 மாதத்திற்கு முன்பாகவே, அந்த பணி இடத்தை நிரப்புவது குறித்து ஆலோசிக்கப்படும். நீதிபதியை நியமிக்கும் பணிகள் நிறைவு பெற 6 மாதங்கள் ஆகும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ரூ.485 கோடி ஒதுக்கீடு

  மாநிலத்தில் 5 மாவட்டங்களில் ராகி அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகிறது. 2 லட்சம் மெட்ரிக் டன் ராகியை மத்திய அரசு வாங்கி வந்தது. மத்திய அரசு கர்நாடகத்தில் இருந்து கூடுதலாக 1 லட்சம் மெட்ரிக் டன் ராகி வாங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

  இதற்காக ரூ.485 கோடியை கர்நாடகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கி இருக்கிறது. கா்நாடகத்திடம் இருந்து கூடுதலாக 1 லட்சம் மெட்ரிக் டன் ராகி வாங்க அனுமதி அளித்த பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உணவுத்துறை மந்திரி பியூஸ் கோயலுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
  இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

Next Story