பெண்களிடம் நகைப்பறிப்பில் ஈடுபட்ட ஈரானிய கொள்ளையர்கள் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
பெண்களிடம் நகைப்பறிப்பில் ஈடுபட்ட ஈரானிய கொள்ளையர்கள் 2 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்து போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா உத்தரவிட்டார்.
சேலம்:
பெண்களிடம் நகைப்பறிப்பில் ஈடுபட்ட ஈரானிய கொள்ளையர்கள் 2 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்து போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா உத்தரவிட்டார்.
பெண்களிடம் நகைப்பறிப்பு
கர்நாடக மாநிலம் பிதார் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் முகமது ஆசிப் அலி (வயது 23), ஷபிஷேக் (30). இவர்கள் 2 பேரும் கடந்த மார்ச் மாதம் 10-ந் தேதி செவ்வாய்பேட்டை மூங்கப்பாடி பகுதியை சேர்ந்த பத்மாவதி என்பவரிடம் 4 பவுன் நகையை பறித்து சென்றனர். இதுதொடர்பாக செவ்வாய்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது ஆசிப் அலி, ஷபிஷேக் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர்கள் 2 பேரும் கடந்த 3 ஆண்டுகளில் சேலம் மாநகரில் சூரமங்கலம், பள்ளப்பட்டி, அஸ்தம்பட்டி ஆகிய பகுதிகளில் 25 பவுன் நகைகளை பல்வேறு பெண்களிடம் பறித்து சென்றுள்ளனர். மேலும் இருசக்கர வாகனங்களையும் திருடி சென்றனர். திருட்டையே தொழிலாக கொண்டுள்ள கொள்ளையர்களான அவர்கள் நகைப்பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டவுடன் காரில் தப்பி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவர்கள் மீது சேலம், தர்மபுரி மாவட்டங்களில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி உள்ளன.
குண்டர் சட்டத்தில் கைது
மேலும் அவர்களுக்கு பூர்விகம் ஈரான் நாடு என்பதும், அங்கிருந்து ஒரு குழுவாக பிரிந்து கர்நாடக மாநிலத்துக்கு அகதிகளாக வந்ததும் தெரியவந்தது. பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் தொடர்ந்து நகைப்பறிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரி போலீஸ் துணை கமிஷனர் மோகன்ராஜ், இன்ஸ்பெக்டர் கணேசன் ஆகியோர் போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தனர்.
இதை பரிசீலித்து முகமது ஆசிப் அலி, ஷபிஷேக் ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா நேற்று உத்தரவிட்டார். இதற்கான ஆணை சிறையில் உள்ள அவர்களிடம் அதிகாரிகள் மூலம் வழங்கப்பட்டன.
Related Tags :
Next Story