சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் கைது: போலீசாரிடம் சிக்கும் முன்பு செல்போனை உடைத்த திவ்யா
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு விவகாரத்தில் கைதான திவ்யா, போலீசாரிடம் சிக்கும் முன்பு செல்போனை உடைத்தது தெரியவந்து உள்ளது.
பெங்களூரு:
திவ்யா கைது
கர்நாடகத்தில் 545 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணிக்கு நடந்த தேர்வில் முறைகேடு நடந்தது பற்றி சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் கலபுரகியை சேர்ந்த பா.ஜனதா பெண் பிரமுகர் திவ்யா காகரகி உள்பட 20 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தேர்வு முறைகேட்டில் மூளையாக செயல்பட்ட திவ்யா கடந்த 18 நாட்களாக தலைமறைவாக இருந்தார். அவரை நேற்று முன்தினம் மராட்டிய மாநிலம் புனேயில் போலீசார் கைது செய்தனர். அவருடன் சேர்ந்து மேலும் 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் புனேயில் உள்ள ஓட்டலில் தங்கி இருந்த திவ்யா போலீசார் தன்னை கைது செய்ய வருவது பற்றி அறிந்ததும் தனது செல்போனை உடைத்து உள்ளார். ஆனாலும் அந்த செல்போனை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அந்த செல்போனில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு பற்றிய தகவல்கள் இடம் பெற்று இருந்ததால் செல்போனை, திவ்யா உடைத்ததாக கூறப்படுகிறது.
கண்ணீர்விட்டு அழுதார்
திவ்யாவுடன் கைதான 5 பேரின் செல்போன்களில் இருந்தும் சில முக்கிய தகவல்கள் அழிக்கப்பட்டு இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதனால் திவ்யா செல்போன், மற்ற 5 பேரின் செல்போன்களில் இருந்த தகவல்களை மீட்டெடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். அதே நேரத்தில் முறைகேடு நடந்த பள்ளியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும், தலைமறைவாக உள்ள என்ஜினீயர் மஞ்சுநாத் என்பவர் உதவியுடன் அழித்ததும் தெரியவந்து உள்ளது. அந்த காட்சிகளை மறுபடியும் எடுக்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்து உள்ளார்.
இந்த நிலையில் கலபுரகி டவுன் ஆலந்தாவில் உள்ள பெண்கள் பாதுகாப்பு மையத்தில் அடைக்கப்பட்டு உள்ள திவ்யாவிடம் நேற்று சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது போலீசார் முன்பு திவ்யா கண்ணீர்விட்டு கதறி அழுததாக கூறப்படுகிறது. மேலும் அவர் உணவு சாப்பிடாமல் இருந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கிடையே சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு மறுதேர்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்து தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நேற்று பெங்களூரு சுதந்திர பூங்காவில் போராட்டம் நடத்தினர். இதில் கலந்து கொண்ட பெண்கள் கண்ணீர்விட்டு அழுதனர்.
Related Tags :
Next Story