சேலத்தில் பரிதாபம்: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகன், கார் கவிழ்ந்து பலி
சேலத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சென்னையை சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகன் பலியானார். மேலும் டிரைவர் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
சேலம்:
சேலத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சென்னையை சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகன் பலியானார். மேலும் டிரைவர் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
சப்-இன்ஸ்பெக்டர் மகன்
சென்னை ஆயிரம் விளக்கு காவலர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் அந்தோணி தாசன். இவர் ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். அவருடைய மகன் அருண் (வயது 26). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அருண் நேற்று முன்தினம் இரவு தன்னுடன் வேலை பார்த்து வரும் நண்பர்களான பள்ளிகரணையை சேர்ந்த ஜேம்ஸ் ஆல்பர்ட் (30), திருவரங்காடு பகுதியை சேர்ந்த ஆனந்த் (32), ஜார்ஜ் டவுன் ஏழுகிணறு பகுதியை சேர்ந்த மரியாபெர்டினல் (23) ஆகியோருடன் ஊட்டிக்கு காரில் புறப்பட்டார்.
காரை பரங்கிமலையை சேர்ந்த டிரைவர் அருள்ஜட்சன் (34) என்பவர் ஓட்டினார். அவர்கள் நேற்று அதிகாலை சேலம் குமரகிரி பைபாஸ் ரோட்டில் வந்த போது, சாலையை மூதாட்டி ஒருவர் கடந்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அவர் மீது மோதி விடாமல் இருக்க டிரைவர் அருள்ஜட்சன் காரை திருப்பினார்.
சாவு
அப்போது கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்தவர்கள் இடிபாடுக்குள் சிக்கி கூச்சலிட்டனர். இதை பார்ந்த அந்த வழியாக வந்தவர்கள் இதுகுறித்து அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து காருக்குள் படுகாயத்துடன் இருந்த 5 பேரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் மகன் அருண் பரிதாபமாக உயிரிழந்தார். டிரைவர் உள்பட 4 பேருக்கு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து தொடர்்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story