கர்நாடக பா.ஜனதா தலைவராக ஷோபாவை நியமிக்க முடிவு
கர்நாடக மாநில பா.ஜனதா தலைவராக ஷோபாவை நியமிக்க கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பெங்களூரு:
மாநில தலைவரை மாற்றிவிட்டு...
கா்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு(2023) மே மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு மட்டுமே இருப்பதால் மாநிலத்தில் கட்சியை பலப்படுத்த மேலிடம் திட்டமிட்டுள்ளது. இதற்காக மந்திரிசபையை மாற்றியமைக்கவும், 15 மூத்த மந்திரிகளை நீக்கவும் பா.ஜனதா மேலிட தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையில், மாநில தலைவரை மாற்றி விட்டு புதிய தலைவரை நியமிக்க கட்சி முடிவு செய்திருக்கிறது.
தற்போது கர்நாடக மாநில பா.ஜனதா தலைவராக இருப்பவர் நளின்குமார் கட்டீல். அவரது பதவிக்காலம் ஆகஸ்டு மாதத்துடன் நிறைவு பெற இருக்கிறது. அவருக்கு பதிலாக ஒக்கலிக சமுதாயத்தை சேர்ந்த ஒருவரை மாநில தலைவராக நியமிக்க பா.ஜனதா தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். ஏனெனில் காங்கிரஸ் தலைவராக டி.கே.சிவக்குமாரும், ஜனதாதளம்(எஸ்) கட்சியில் குமாரசாமியும் இருந்து வருகின்றனர்.
ஷோபாவை நியமிக்க முடிவு
அவர்கள் ஒக்கலிக சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால், பா.ஜனதாவும் ஒக்கலிக சமுதாயத்தை சேர்ந்தவரை நியமிக்க முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. குறிப்பாக மத்திய மந்திரியான ஷோபாவை மாநில தலைவராக நியமிக்க பா.ஜனதா மேலிட தலைவர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மத்திய மந்திரியாக சிறப்பாக செயல்பட்டு வரும் அவரை, மாநில தலைவராக நியமித்தால், அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு கூடுதல் பலம் கிடைக்கும் என்று கருதப்படுகிறது.
இதன் காரணமாக ஷோபாவை நியமிக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் மாநில தலைவர் பதவியை கைப்பற்ற தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி மற்றும் உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயணும் போட்டியில் இருப்பதாக தெரியவந்துள்ளது. ஆனாலும் ஷோபாவுக்கு, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவின் ஆதரவு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுபற்றி பா.ஜனதா மேலிட தலைவர்கள் ஆலோசித்து மாநில தலைவரை நியமிக்க உள்ளனர்.
Related Tags :
Next Story