புழுதிவாக்கம்-மடிப்பாக்கம் இடையே மெட்ரோ ரெயில் தூண் அமைக்கும் பணி - நாளை முதல் போக்குவரத்து மாற்றம்


புழுதிவாக்கம்-மடிப்பாக்கம் இடையே மெட்ரோ ரெயில் தூண் அமைக்கும் பணி - நாளை முதல் போக்குவரத்து மாற்றம்
x
தினத்தந்தி 1 May 2022 9:42 AM IST (Updated: 1 May 2022 9:42 AM IST)
t-max-icont-min-icon

சென்னை போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை,  

சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் (2-ம் கட்டம் 5-வது பகுதி) புழுதிவாக்கம் முதல் மடிப்பாக்கம் வரையில் உள்ள பகுதியில் மெட்ரோ ரெயில் தூண் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இந்த பணி நடைபெறும் கால கட்டத்தில் எம்.ஆர்.டி.எஸ். சாலை வாணுவம்பேட்டை சந்திப்பில் இருந்து கீழ்க்கட்டளை நோக்கி செல்லும் மாநகர பஸ்கள், கார் உள்பட 4 சக்கர இலகுரக வாகனங்கள் மற்றும் அனைத்து வர்த்தக பயன்பாட்டு வாகனங்கள் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. 

எனவே இந்த வாகனங்கள் ஆதம்பாக்கம் எம்.ஆர்.டி.எஸ். ரெயில் நிலைய சந்திப்பில் இருந்து வேளச்சேரி எம்.ஆர்.டி.எஸ். சாலை, கைவேலி சிக்னல் சந்திப்பில் வலது பக்கம் திரும்பி பழைய மேடவாக்கம் சாலை, ராம் நகர், சபரி நகர் சாலை, பொன்னியம்மன் கோவில் தெரு வழியாக ஆக்சிஸ் வங்கி வந்தடையலாம். 

இடைப்பட்ட பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் பாலாம்பிகை நகர் சந்திப்பில் இருந்து நேராக செல்லாமல், இடதுபுறம் திரும்பி எம்.ஆர்.டி.எஸ். சாலை இணைந்து நேராக சென்று கைவேலி சிக்னல் வந்தடையலாம். அங்கிருந்து சர்வீஸ் சாலை சென்று ஆக்சிஸ் வங்கி மேடவாக்கம் சாலை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி தாங்கள் செல்ல வேண்டிய கீழ்க்கட்டளை மற்றும் அதற்கு மேற்கு உள்ள பகுதிகளுக்கு செல்லலாம்.

ஆனால் எதிர்புறம் சாலையில் கீழ்க்கட்டளையில் இருந்து கிண்டி நோக்கி செல்லும் வாகனங்கள் ஏற்கனவே உள்ள பாதையில் மாற்றம் ஏதும் இன்றி நேராக செல்லலாம் என்பதை தெரிவித்து கொள்ளப்படுகிறது. இந்த போக்குவரத்து மாற்றம் 2-ந்தேதி (நாளை) காலை 7 மணி முதல் அமலுக்கு வரும். பொதுமக்கள் தங்கள் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை dcpsouth.trafic@gmail.com, sundramoorthyb@kecrpg.com ஆகிய இ-மெயில் முகவரிகளில் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story