மாற்றிடம் வழங்கும் திட்டத்தில் முறைகேடு: முதுமலை ஊராட்சியில் கிராம சபை கூட்டத்தை பொதுமக்கள் புறக்கணிப்பு
அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை. மாற்றிடம் வழங்கும் திட்டத்தில் நடைபெற்ற முறைகேடு மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி முதுமலை ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தை பொதுமக்கள் புறக்கணித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
கூடலூர்
அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை. மாற்றிடம் வழங்கும் திட்டத்தில் நடைபெற்ற முறைகேடு மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி முதுமலை ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தை பொதுமக்கள் புறக்கணித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
கிராம சபை கூட்டம்
தொழிலாளர் தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சி மன்றங்களில் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டது. கூடலூர் பகுதியில் உள்ள முதுமலை ஊராட்சி முதுகுளியில் கிராம சபை கூட்டம் நடத்துவதற்காக அனைத்து துறை அதிகாரிகள் வந்து இருந்தனர். தொடர்ந்து பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்துக்கு வந்தனர்.
அப்போது ஊராட்சி பகுதியில் வசிக்கும் மக்களை மாற்றிடம் வழங்கும் திட்டத்தின் கீழ் சன்னக்கொல்லியில் மறு குடியமர்த்தப்பட்டது. ஆனால் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்துக்கு இதுவரை பட்டா வழங்க வில்லை. மின்சாரம், குடிநீர் உள்பட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. மேலும் மாற்றிடம் வழங்கும் திட்டத்தில் நடைபெற்ற முறைகேடு மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
புறக்கணித்ததால் பரபரப்பு
இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தொடர் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இருப்பினும் மாற்றிடம் வழங்கும் திட்டத்தில் முறைகேடு செய்த நபர்களுடன் அதிகாரிகள் இணைந்து பணியாற்றி வருகின்றனர். இதுமட்டுமின்றி இதுவரை நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அதிகாரிகளிடம் ஊராட்சி மக்கள் புகார் கூறினர்.
இதற்கு அதிகாரிகள் கிராமசபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் உயர் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்படும் என தெரிவித்தனர். ஆனால் இதை ஏற்க மறுத்த ஊராட்சி மக்கள் கிராம சபை கூட்டத்தை புறக்கணிப்பதாக தெரிவித்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் முதுமலை ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடைபெறவில்லை. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்ரீமதுரையில் கிராம சபை கூட்டம்
இதேபோல் கூடலூர் அருகே ஸ்ரீமதுரை ஊராட்சி குங்கூர்மூலா அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஊராட்சி தலைவர் சுனில் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. தாசில்தார் சித்தராஜ், வட்ட வழங்கல் அலுவலர் சரவணன், கூடலூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மோகன் குமாரமங்கலம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். மசினகுடி ஊராட்சி நிர்வாகம் சார்பில் மாயார் நடுநிலைப்பள்ளியில் கிராமசபை கூட்டம் ஊராட்சி மன்றத்தலைவர் மாதேவி மோகன் தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி பகுதியை மக்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் அவர்கள் வளர்க்கக்கூடிய கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலங்கள் ஒதுக்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையத்தை சுத்தமாக பராமரிக்க வேண்டும். ஊராட்சி பகுதி இளைஞர்களுக்கு விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும். ஊராட்சி பகுதியில் கால்நடைகளின் தாகத்தை தணிக்கும் வகையில் குடிநீர் தொட்டிகள் கட்ட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் தெரிவித்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
Related Tags :
Next Story