குமுளியில் புதிய பஸ் நிலையம் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றிய முதல்-அமைச்சருக்கு பாராட்டு
குமுளியில் ரூ.7½ கோடியில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றிய முதல்-அமைச்சருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
கூடலூர்:
கூடலூர் நகராட்சியின் 21-வது வார்டு பகுதியான குமுளி தமிழக எல்லையில் உள்ளது. இங்கு பஸ் நிலையம் இல்லாததால் அனைத்து பஸ்களும் சாலையோரம் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கிவிட்டு செல்கின்றன.
இதனால் கோடைகாலத்தில் பயணிகள் குமுளி சாலையில் வெயிலில் நின்று அவதிப்படுகிறார்கள். அதேபோல மழைக்காலத்தில் பயணிகள் ஒதுங்க இடம் இல்லாமல் சிரமம் அடைந்து வந்தனர். எனவே குமுளியில் அடிப்படை வசதிகளுடன் புதிதாக பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
குமுளியில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனை பயன்பாடு இன்றி உள்ளது. எனவே இந்த பணிமனை உள்ள இடத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்று கூடலூர் நகராட்சி தலைவர் பத்மாவதி லோகந்துரை, ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. மகாராஜன், தேனி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. ஆகியோரிடம் கோரிக்கை மனு கொடுத்தார். அவர்கள் இதுகுறித்து தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமியிடம் வலியுறுத்தினர். இதையடுத்து கூட்டுறவுத்துறை அமைச்சர் பரிந்துரையின் பேரில் தேனிக்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குமுளியில் புதிய பஸ் நிலையம் அமைக்க ரூ.7½ கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்து உள்ளார்.
இதையடுத்து நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்து அப்பகுதி மக்கள் வாழ்த்து கடிதம் அனுப்பி வருகின்றனர்.
Related Tags :
Next Story