பெருமுகை கிராமசபை கூட்டத்தில் வரவு-செலவு கணக்கு வைக்காததால் பொதுமக்கள் வாக்குவாதம்


பெருமுகை கிராமசபை கூட்டத்தில் வரவு-செலவு கணக்கு வைக்காததால் பொதுமக்கள் வாக்குவாதம்
x
தினத்தந்தி 1 May 2022 9:57 PM IST (Updated: 1 May 2022 9:57 PM IST)
t-max-icont-min-icon

பெருமுகை கிராமசபை கூட்டத்தில் வரவு-செலவு கணக்கு வைக்காததால் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வேலூர்

வேலூரை அடுத்த பெருமுகையில்  கிராம சபை கூட்டம் நடந்தது. பெருமுகை ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பராஜ் தலைமை தாங்கினார். இதில், பார்வையாளராக வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வின்சென்ட் ரமேஷ்பாபு கலந்துகொண்டார். கூட்டத்தில், ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகள், மகளிர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. ஊராட்சியின் பொதுநிதி செலவின பதிவேடுகள் (வரவு, செலவு கணக்குகள்) மற்றும் பில்புக் வைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
 
இதனை அறிந்த பொதுமக்கள் அவற்றை கூட்டத்தில் வைக்க வேண்டும் என்று கூறி உள்ளனர். அதற்கு ஊராட்சி மன்ற தலைவர் உரிய பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதையடுத்து பொதுமக்கள் பொதுநிதி செலவின பதிவேடுகள், பில்புக்கை கூட்டத்தில் வைக்கும்படி வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வின்சென்ட் ரமேஷ்பாபுவிடம் முறையிட்டுள்ளனர். அதற்கு அவர், நான் இந்த கூட்டத்தின் பார்வையாளராக வந்துள்ளேன். இதுபற்றி எதுவும் சொல்ல முடியாது என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின்னரும் கிராம சபை கூட்டத்தில் பொதுநிதி செலவின பதிவேடுகள், பில்புக் வைக்கப்படாததால் சிலர் கூட்டத்தை புறக்கணித்து சென்றனர். மீதமிருந்த நபர்களுடன் கிராம சபை நடந்து முடிந்தது.

Next Story