கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்


கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 1 May 2022 10:16 PM IST (Updated: 1 May 2022 10:16 PM IST)
t-max-icont-min-icon

கோடை வெயிலில் இருந்து தப்பிக்க கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மலைப்பாதையில் 10 கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

கொடைக்கானல்:
கோடை வெயிலில் இருந்து தப்பிக்க கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மலைப்பாதையில் 10 கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.  
கோடை வெயில்
நாடு முழுவதும் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதனால் குளிர்ச்சியான பகுதிகளுக்கு பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர். அந்த வகையில் கோடை வெயிலில் இருந்து தப்பிக்க கோடை வாசஸ்தலமான கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தருகின்றனர். குறிப்பாக கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, மராட்டியம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து தினசரி ஏராளமானோர் கொடைக்கானலுக்கு வருகை தருகின்றனர். 
இந்தநிலையில் நேற்று மே தினம் மற்றும் வாரவிடுமுறையையொட்டி அதிகாலை முதலே ஏராளமான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்தனர். இதனால் மலைப்பாதையில் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 
10 கி.மீ.தூரம் அணிவகுத்த வாகனங்கள்
இதற்கிடையே காலை 9 மணிக்கு மேல் சுற்றுலா வாகனங்கள் அதிக அளவில் வந்ததால் வெள்ளி நீர்வீழ்ச்சி முதல் அப்சர்வேட்டரி வரை 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் செல்ல வழியின்றி அணிவகுத்து நின்றன. இதனால் சுற்றுலா பயணிகள் அவதியடைந்தனர். 
இதுகுறித்து தகவல் அறிந்த கொடைக்கானல் போக்குவரத்து போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். அப்போது போதிய போலீசார் இல்லாததால் அங்கிருந்த சுற்றுலா வழிகாட்டிகள், தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகளும் சேர்ந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். அதைத்தொடர்ந்து வாகனங்கள் சுற்றுலா இடங்களுக்கு சென்றன. 
சுற்றுலா பயணிகள் உற்சாகம்
சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்ததால் கொடைக்கானலில் உள்ள சுற்றுலா இடங்கள் அனைத்தும் நேற்று களைகட்டின. குறிப்பாக பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்கா, பைன்மரக்காடு, பில்லர்ராக், மோயர் பாயிண்ட், டால்பின் நோஸ் உள்ளிட்ட சுற்றுலா இடங்களிலும், வெள்ளி நீர்வீழ்ச்சி, பாம்பார் நீர்வீழ்ச்சி, தேவதை அருவி உள்ளிட்ட அருவி பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. மேலும் கொடைக்கானல் ஏரிச்சாலையில் சைக்கிள், குதிரை சவாரி செய்தும், நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர். 
கொடைக்கானலில் நேற்று காலை வெப்பம் நிலவிய நிலையில், மாலையில் மேகங்கள் திரண்டு இதமான காற்றுடன் சாரல் மழை பெய்தது. அப்போது மழையில் நனைந்தபடி சுற்றுலா பயணிகள் சுற்றுலா இடங்களை பார்த்து ரசித்தனர். 
அடிப்படை வசதிகள்
இதற்கிடையே குளுகுளு சீசன் தொடங்கியுள்ள நிலையில் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் சரிவர செய்துதரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக சுற்றுலா வாகனங்களை நிறுத்துவதற்கு இடம் இல்லாததால் சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் பின்னால் வரும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே வாகனங்களை நிறுத்துவதற்கு உடனடியாக இடங்களை தேர்வு செய்ய வேண்டும். மேலும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டும். அத்துடன் குடிநீர் பாட்டில்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், பஸ்களில் வரும் சுற்றுலா பயணிகள் குடிப்பதற்கு தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர். இதை தவிர்க்க நகரின் முக்கிய இடங்களில் குடிநீர் தொட்டிகள் வைக்க வேண்டும். மேலும் அனைத்து ஓட்டல்களிலும் விலை பட்டியலை தெளிவாக எழுதி வைப்பதற்கு அறிவுறுத்த வேண்டும். தங்கும் விடுதிகளில் வாடகை கட்டணங்களை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று சுற்றுலா பயணிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story