மகிமண்டலத்தில் தொழிற்பேட்டை அமைக்கப்படும் அமைச்சர் துரைமுருகன் பேச்சு
மேல்பாடி பகுதியில் அரசு கலைக்கல்லூரி, மகிமண்டலத்தில் மிகப்பெரிய தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்று மேல்பாடியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
திருவலம்
மேல்பாடி பகுதியில் அரசு கலைக்கல்லூரி, மகிமண்டலத்தில் மிகப்பெரிய தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்று மேல்பாடியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
கிராமசபை கூட்டம்
வேலூர் மாவட்டம், காட்பாடி ஊராட்சி ஒன்றியம், மேல்பாடி ஊராட்சி, சின்ன வள்ளிமலையில் மே தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடந்தது. நிகழ்ச்சிக்கு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமை தாங்கினார். வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் முன்னிலை வகித்தார்.
கிராம சபை கூட்டத்தை தொடங்கி வைத்து அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-
மக்களின் வரிப்பணத்தில் தான் அரசாங்கம் நடைபெற்று வருகிறது. மக்களின் வரிப்பணத்தையும், அரசாங்கம் கொடுக்கும் நிதியுதவியையும், அந்தந்த ஊராட்சிகள் சரியான முறையில் செலவு செய்து அதன் விவரங்களை பொதுமக்களிடம் தெரியப்படுத்த வேண்டும். அப்படி தெரியப்படுத்தினால் மட்டும்தான் அது உண்மையான ஜனநாயகம் ஆகும்.
அரசு கலைக்கல்லூரி
இந்த பகுதியை பள்ளி மாணவ, மாணவிகள் மேல்நிலை கல்வி முடிந்தவுடன், உயர்கல்வியை தொடர மிகவும் சிரமப்பட்டு, வேலூர் சென்று படித்து வருகின்றனர். இதனால் பெற்றோர்கள் மிகவும் மனவேதனைக்கு உள்ளாகி வருகின்றனர். இதனை நிவர்த்தி செய்வதற்காக உடனடியாக மேல்பாடியில் அரசு கலைக்கல்லூரி அமைக்கப்படும், மேலும் கல்லூரி மாணவர்களுடைய விளையாட்டு திறனை மேம்படுத்துவதற்காக, விளையாட்டு மைதானமும் கொண்டு வரப்படும்.
இந்தப் பகுதியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகவும், குறிப்பாக பெண்களின் கடினங்களை போக்குவதற்காகவும், மிகப்பெரிய மருத்துவமனை ஒன்று அமைக்கப்படும்,
தொழிற்பேட்டை
அது மட்டுமில்லாமல் வேலைவாய்ப்பிற்காக காத்திருக்கும் படித்த இளைஞர்களின் வசதிக்காக, மகிமண்டலம் பகுதியில் மிகப்பெரிய தொழிற்பேட்டை (சிப்காட்) அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் காட்பாடி ஒன்றியக்குழு தலைவர் வேல்முருகன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் சரவணன், ஊராட்சி உதவி இயக்குனர் ராமகிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர் நித்தியானந்தம், மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தடுப்பணைகள்
நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ளூர் மொழியில் நடத்த வேண்டும் என்பது தி.மு.க.வின் நீண்டநாள் கொள்கை. இப்போது தான் பிரதமர் கூறியுள்ளார். அதனை பிரதமர் நிறைவேற்ற வேண்டும். இலங்கை தமிழர்கள் உண்ண உணவின்றி உடையின்றி உள்ளனர். தமிழகத்தில் அனைத்து கட்சிகளும், இலங்கை தமிழர் விவகாரத்தில் மத்திய அரசு அவர்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்க வேண்டுமென கூறியும், மத்திய அரசு மவுனம் காக்கிறது. ஆனால் வட இந்தியர்களுக்கு பாதிப்பு என்றால் இவ்வாறு இருந்திருப்பார்களா?.
வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் பாலாற்றின் குறுக்கே 2 தடுப்பணைகள் கட்டப்படும்.
பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணிராமதாஸ் படிப்படியாக பூரண மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் என்று கோரியுள்ளார். பா.ம.க. ஆட்சிக்கு வந்து பூரண மதுவிலக்கை கொண்டு வரட்டும்.
காலி பணியிடங்கள்
புதிதாக 2 மணல்குவாரி தொடங்க சுற்றுச்சூழல் அனுமதி கோரியுள்ளோம். நீர்வளத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் கடந்த 10 ஆண்டுகளாக காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. ஆயிரக்கணக்கான காலி பணியிடங்கள் உள்ளது, அதனை நிரப்ப நிதி பற்றாக்குறை உள்ளது. அதற்காக நிதி கோரியுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story