கிராம சபை கூட்டத்தில் தீர்மான புத்தகத்தை பறித்துக்கொண்டு ஓட்டம்


கிராம சபை கூட்டத்தில் தீர்மான புத்தகத்தை பறித்துக்கொண்டு ஓட்டம்
x
தினத்தந்தி 1 May 2022 10:23 PM IST (Updated: 1 May 2022 10:23 PM IST)
t-max-icont-min-icon

மொரசப்பல்லி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில், தீர்மான புத்தகத்தை பறித்துக்கொண்டு ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பேரணாம்பட்டு

மொரசப்பல்லி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில், தீர்மான புத்தகத்தை பறித்துக்கொண்டு ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கிராம சபை கூட்டம் 

பேரணாம்பட்டு ஒன்றியம் மொரசப்பல்லி ஊராட்சியில் நேற்று கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் பிரசன்னா தேவிநீஸ் தலைமையில் நடந்தது. கூட்டம் தொடங்கியதும் ஊசூரான்பட்டி கிராமத்தை சேர்ந்த சிலர் ஊராட்சி கணக்கை கேட்டும், பறிமுதல் செய்யப்பட்ட மணலை விற்றதாக குற்றச்சாட்டியும், குப்பைகள் எரிக்கப்பட்டு வருவதாகவும், நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக கூறி ரகளையில் ஈடுபட்டு தீர்மானத்தை படிக்க விடாமல் தடுத்து, கிராம சபை கூட்டத்தை நடத்த விடாமல் தடுத்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த பேரணாம்பட்டு ஒன்றிய ஆணையாளர் ஹேமலதா, ஒன்றியக்குழு தலைவர் சித்ரா ஜனார்த்தனன், ஒன்றிய தி.மு.க. செயலாளர் பொகளூர் ஜனார்த்தனன் ஆகியோர் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். 

அப்போது அவர்கள் கூறியதாவது:-

புத்தகம் பறிப்பு

ஊராட்சி மன்ற தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டு 5 மாதங்களாகிறது, குடிநீர், மின்சாரம், சாலை வசதி என ஊருக்கு என்ன தேவையோ அது குறித்து மனு கொடுங்கள், சீரான முறையில் குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இவ்வாறு பேசிக் கொண்டிருந்த போது ஊசூரான்பட்டியை சேர்ந்த சிலர் ஊராட்சி செயலாளர் மோகனிடம் இருந்து தீர்மான புத்தகத்தை பறித்துக் கொண்டு வெளியே ஓடினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

பல்லலகுப்பம் ஊராட்சியில் உள்ள ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் கஜேந்திரன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோர் திரண்டு பேரணாம்பட்டு நகராட்சியின் குப்பைகள் பல்லலகுப்பம் பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக கொட்டப்பட்டு வருவதால் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறி, எண்ணெய் பசையுடன் காணப்படுவதாக கூறி குப்பை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி முற்றுகையிட்டு கிராம சபை கூட்டம் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் கிராம சபை கூட்டம் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த பேரணாம்பட்டு ஒன்றிய ஆணையாளர் பாரி விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுப்பட்ட கிராம மக்களிடம் பேசி 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து கிராம சபை கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டது.

Next Story