கிராமசபை கூட்டங்களில் பொதுமக்கள் பங்கேற்க வேண்டும்
அரசால் நிறைவேற்றப்படும் திட்டங்களை தெரிந்து கொள்ள கிராம சபை கூட்டங்களில் பொதுமக்கள் பங்கேற்க வேண்டும் என்று கலெக்டர் சமீரன் பேசினார்.
கோவை
அரசால் நிறைவேற்றப்படும் திட்டங்களை தெரிந்து கொள்ள கிராம சபை கூட்டங்களில் பொதுமக்கள் பங்கேற்க வேண்டும் என்று கலெக்டர் சமீரன் பேசினார்.
கிராம சபை கூட்டம்
கோவை மாவட்டம் மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மாவுதம்பதி மலைவாழ் கிராமத்தில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடந்தது. ஊராட்சி தலைவர் கோமதி செந்தில்குமார் தலைமை தாங்கினார். இதில் கலெக்டர் சமீரன் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கிராம சபை கூட்டங்களில் வரவு செலவு கணக்குகள், பல்வேறு திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வு மற்றும் அரசு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்பட பல்வேறு திட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்படும்.
இவ்வாறு நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் அந்தந்த ஊராட்சியில் வசித்து வரும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பொதுமக்களும் பங்கேற்பது முக்கிய கடமை ஆகும். கிராம சபை விவாதங்களில் பங்கேற்று, பயனாளிகள் தேர்வு மற்றும் அரசால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு தீர்மானங்கள் உடனடியாக நிறைவேற்றப்பட பொதுமக்களின் அரசு திட்டங்களின் மீது கண்காணிப்பு அவசியம். மேலும் விலையில்லா வீட்டுமனை பட்டாக்கள், மனை உள்ளவர்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முகாம் நடத்த உத்தரவு
மேலும் மாவுதம்பதி, சின்னாம்பதி உள்ளிட்ட பகுதிகளில் உயிரிழந்தவர்களின் இறப்பு சான்றிதழ் பெறாத நிலையில் உள்ளதால் அவர்களுக்கு இறப்பு சான்றிதழ் வழங்க ஆர்.டி.ஓ. தலைமையில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடத்த கலெக்டர் உத்தரவிட்டார்.
தொடர்ந்து மாவுதம்பதியில் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்தல், அனைத்து ஊராட்சிகளிலும் முதலுதவி பெட்டிகள் அமைத்தல், பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்தல் தூய்மை இயக்கத்தை விரிவுபடுத்தி பசுமை பரப்பை அதிகரித்தல், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துதல், ஊராட்சி பகுதியில் அமைந்து உள்ள நீர்நிலைகளை பாதுகாத்தல் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
விழிப்புணர்வு
முன்னதாக பள்ளி மாணவிகளிடம் சைல்டு லைன் எண்ணான 1098 குறித்து கலெக்டர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, ஊராட்சி உதவி இயக்குனர் முருகேசன், கோவை ஆர்.டி.ஓ. இளங்கோ, மாவட்ட சமூக நல அதிகாரி தங்கமணி, வேளாண்துணை இணை இயக்குனர் சித்ராதேவி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அதிகாரி ராம்குமார், மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் பெருமாள்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story