கொரோனா தொற்று அதிகரித்தால் மராட்டியத்தில் முக கவசம் கட்டாயமாக்கப்படும்- சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே பேட்டி
கொரோனா தொற்று அதிகரித்தால் மராட்டியத்தில் முககவசம் கட்டாயமாக்கப்படும் என சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே கூறியுள்ளார்.
மும்பை,
கொரோனா தொற்று அதிகரித்தால் மராட்டியத்தில் முககவசம் கட்டாயமாக்கப்படும் என சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே கூறியுள்ளார்.
கட்டுப்பாடு தளர்வு
நாட்டிலேயே அதிகம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மராட்டிய மாநிலத்தில் நோய் தொற்றின் பாதிப்பு வேகமாக குறைந்து வந்தது.
கொரோனா தொற்றின் தாக்கம் மிகவும் குறைந்ததை அடுத்து ஏப்ரல் 2-ந் தேதி மராட்டிய புத்தாண்டான குடி பட்வா தினத்தன்று மராட்டிய அரசு கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தையும் திரும்ப பெறுவதாக அறிவித்தது. மேலும் முககவசம் அணிய வேண்டிய அவசியம் இல்லை என்றும் அறிவித்தது.
இருப்பினும் மராட்டிய சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே கொரோனா பரவுவதை தடுக்க மக்கள் தானாக முன்வந்து முககவசம் அணிந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தி இருந்தார்.
மீண்டும் பாதிப்பு
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் தலைதூக்க தொடங்கி உள்ளது.
மராட்டிய மாநிலத்தில் அதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக படிப்படியாக அதிகரித்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நேற்று 155 ஆக பதிவானது. இந்தநிலையில் சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபேவிடம் நிருபர்கள் பேட்டி கண்டனர். அப்போது கொரோனா தொற்று பாதிப்பு குறித்து கேள்வி எழுப்பினர்
அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-
தற்போது தேவையில்லை...
மராட்டியம் மட்டும் அன்றி நாடு முழுவதும் பல இடங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் மாநில முதல்-மந்தரிகளின் கூட்டத்தை கூட்டி இதுகுறித்து கலந்துரையாடினார். மேலும் மாநிலங்களை முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தினார்.
தற்போதைய நிலவரப்படி மராட்டியத்தில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தவேண்டிய தேவை இல்லை. ஆனால் நோய் தொற்று பாதிப்பு அதிகரிக்கும் பட்சத்தில் நாங்கள் கொரோனா கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டியது வரும். மேலும் முக கவசத்தையும் மீண்டும் கட்டாயமாக்க நேரிடும்.
தற்போதைக்கு நிலையை பொருத்திருந்து கண்காணிக்க திட்டமிட்டுள்ளோம்.
தடுப்பூசி பணிகள்
12 வயது முதல் 14 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் 15-ல் இருந்து 17 வயதிற்குட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
பள்ளிகள் தற்போது விடுமுறை காரணமாக மூடப்பட்டு இருப்பதால் தடுப்பூசி செலுத்தும் பணியில் சவால் ஏற்பட்டுள்ளது. 6 வயதில் இருந்து 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து மத்திய அரசு ஏதேனும் நெறிமுறைகளை வகுத்து தந்தால், அதை பின்பற்றி நாங்கள் வேகமாக செயல்படுவோம்.
தடுப்பூசி கட்டாயம் இல்லை என்றாலும் தடுப்பூசி போடுவதன் நன்மைகளை மக்களுக்கு சுட்டிக்காட்டி, அவர்களை தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ள செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story