ஏழை, எளிய மக்களுக்கான திட்டங்களுக்கு தி.மு.க. அரசு மூடுவிழா நடத்தி வருகிறது; டி.டி.வி. தினகரன் குற்றச்சாட்டு
ஏழை, எளிய மக்களுக்கான திட்டங்களுக்கு தி.மு.க. அரசு மூடுவிழா நடத்தி வருகிறது என டி.டி.வி. தினகரன் கூறினார்.
காரைக்குடி,
ஏழை, எளிய மக்களுக்கான திட்டங்களுக்கு தி.மு.க. அரசு மூடுவிழா நடத்தி வருகிறது என டி.டி.வி. தினகரன் கூறினார்.
பொதுக்கூட்டம்
காரைக்குடி பாண்டியன் திடலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சிவகங்கை மாவட்ட செயலாளர் தேர்போகி பாண்டி தலைமை தாங்கினார். தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ராமசாமி முன்னிலை வகித்தார். கண்ணங்குடி யூனியன் தலைவரும், மாவட்ட மாணவரணி செயலாளருமான சரவணா மெய்யப்பன் வரவேற்றார்.
கூட்டத்தில் அ.ம.மு.க. பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், ஆட்சி அதிகாரத்தை எதிர்த்து, துரோகத்தை எதிர்கொண்டு, எளிய ஆனால் உண்மை தொண்டர்களால் உருவான இயக்கம். ஜெயலலிதாவின் ஆட்சியினை தேர்தலின் மூலம் மீட்டெடுக்கும் வரை தொடர்ந்து போராடி வெற்றி பெறுவோம் என்பதை வீரம் நிறைந்த பூமியாம் சிவகங்கை சீமையிலே உறுதியோடு கூறுகிறேன். சாதி, மதம், மொழி வேறுபாடுகளை கடந்து ஒற்றுமையோடு உழைத்தால் வெற்றி கிட்டும். உள்ளாட்சி தேர்தலில் அ.ம.மு.க. பல இடங்களில் வெற்றி பெற்று அனைவரையும் வியக்க செய்து நமது பலத்தை காட்டியுள்ளது.
விரோத போக்கு
தி.மு.க. அரசு தொடர்ந்து தொழிலாளர் விரோத போக்கு அரசாகவே செயல்பட்டு வருகிறது. தேர்தல் வாக்குறுதிகள் பல நிறைவேற்றப்படவில்லை. சில நிறைவேற்றவே முடியாமல் போய்விட்டது. 150 சதவீதம் சொத்துவரி உயர்வு ஏழை எளிய மக்களை மிகவும் பாதித்துவிட்டது. நகைக்கடன் தள்ளுபடி, கல்விக்கடன் தள்ளுபடி வாய் ஜாலத்தோடு முடிந்துவிட்டது. நெல் கொள்முதல் நிலையங்களின் மோசமான செயல்பாடுகளினால் விவசாயிகளின் உழைப்பு வீணாகி வருகிறது.
விவசாய பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட தஞ்சை பகுதியில் தற்போது விவசாயத்திற்கு எதிரான அனைத்து செயல்களும் நடைபெற்று வருகின்றன. அப்பகுதியில் எதிர்காலமே கேள்விக்குறியாக உள்ளது.
மூடுவிழா
ஜெயலலிதா கொண்டு வந்த ஏழை, எளிய மக்களுக்கான அனைத்து திட்டங்களுக்கும் தி.மு.க. அரசு மூடுவிழா நடத்தி வருகிறது. உதவித்தொகையை உயர்த்தி கேட்டு போராடிய மாற்றுத்திறனாளிகளை கைது செய்து அவர்கள் நலனில் அக்கறை இல்லாத அரசாகவே செயல்படுகிறது. சிறு,குறு தொழில்களை காப்போம் என்று கூறிவிட்டு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு திறப்பு விழாவை நடத்தி வருகின்றனர். சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகவே உள்ளது.
இவ்வாறு பேசினார்.
கூட்டத்தில் மண்டல செயலாளர் டேவிட் அண்ணாதுரை, அம்மா பேரவை மாவட்ட செயலாளர் மேபல் ராஜேந்திரன், தொழிலதிபர் மரிங்கிப்பட்டி ரமேஷ், காளையார்கோவில் வடக்கு ஒன்றிய செயலாளர் மகேந்திரன் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை கழக, சார்பு அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் நகர் செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story