கட்டிட தொழிலாளியை கொன்ற ரவுடி கைது


கட்டிட தொழிலாளியை கொன்ற ரவுடி கைது
x

நாகர்கோவிலில் கட்டிட தொழிலாளியை கொலை செய்த வழக்கில் பிரபல ரவுடியை தனிப்படையினர் கைது செய்தனர்.

நாகா்கோவில்:
நாகர்கோவிலில் கட்டிட தொழிலாளியை கொலை செய்த வழக்கில் பிரபல ரவுடியை தனிப்படையினர் கைது செய்தனர்.
கட்டிட தொழிலாளி கொலை
நாகர்கோவில் அறுகுவிளை தெற்குத் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 46), கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 29-ந் தேதியன்று இரவு வேலை முடிந்து சைக்கிளில் வீட்டின் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வாலிபர் ஒருவர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டார்.
இதுகுறித்து வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது கொலையாளியின் உருவம் பதிவாகி இருந்தது. 
கைது
அதை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது முருகன் கொலையில் தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் பகுதியை சேர்ந்த முத்துராமலிங்கம் (25) என்பவருக்கு தொடர்பு இருப்பதும், அவர் அறுகுவிளை பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்து முருகனுடன் கட்டிட வேலைக்கு சென்று வந்ததும் தெரிய வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவருக்கும் மதுபோதையில் தகராறு ஏற்பட்டதாகவும், அப்போது ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததாகவும் கூறப்படுகிறது.
அதைத்தொடர்ந்து தலைமறைவாக இருந்த முத்துராமலிங்கத்தை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமுருகன் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் முத்துராமலிங்கத்தை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் பகுதியில் பதுங்கியிருந்த முத்துராமலிங்கத்தை தனிப்படை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
பிரபல ரவுடி
பின்னர் முத்துராமலிங்கத்தை நாகர்கோவிலுக்கு கொண்டு வந்து விசாரித்தனர். அப்போது முத்துராமலிங்கம் பிரபல ரவுடி என்றும், அவர் மீது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது.
பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி முத்துராமலிங்கத்தை சிறையில் அடைத்தனர்.

Next Story