திண்டிவனம் அருகே துணிகரம் அரசு ஊழியர் வீட்டில் ரூ.6 லட்சம் நகை, பணம் கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை
திண்டிவனம் அருகே அரசு ஊழியர் வீட்டில் ரூ. 6 லட்சம் நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திண்டிவனம்,
இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில்கூறப்படுவதாவது:-
திண்டிவனம் அருகே மரக்காணம் சாலையில் உள்ள அண்ணாநகரில் வசித்து வருபவர் சதாசிவம் (வயது 45). மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி வினிதா என்கிற சுசித்ரா. இவர்களுக்கு மோனிஷ்(11) என்கிற மகன் உள்ளார்.
அண்ணாநகரில், சதாசிவம் வசித்து வரும் வீடு, வாடகை வீடாகும். இந்த நிலையில் கடந்த 27-ந்தேதி முருக்கேரி அருகே சாத்தமங்கலத்தில் உள்ள தனது சொந்த வீட்டுக்கு சதாசிவம் குடும்பத்தினருடன் சென்றிருந்தார்.
நகை, பணம் கொள்ளை
அங்கிருந்து நேற்று மதியம் அண்ணாநகருக்கு வந்த அவர், வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது, பின்பக்கத்தில் இருந்த கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த, அவர் அங்குள்ள அறையில் இருந்த பீரோவை சென்று பார்த்தார். பீரோ கதவு திறந்த நிலையில் பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தது.
மேலும் அதில் இருந்த 13½ பவுன் நகை, ரூ. 1½ லட்சம் ஆகியன கொள்ளை போயிருந்தது. கொள்ளைபோன நகையின் மதிப்பு, ரூ.4½ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
வலைவீச்சு
இதுகுறித்து அறிந்த திண்டிவனம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக்குப்தா, பிரம்மதேசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிபாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர் செல்வகுமார் நேரில் சென்று, அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story