வேலூர் அருகே லாரி டிரைவர் வெட்டிக்கொலை


வேலூர் அருகே லாரி டிரைவர் வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 1 May 2022 11:41 PM IST (Updated: 1 May 2022 11:41 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் அருகே லாரி டிரைவரை வெட்டிக் கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

வேலூர்

வேலூர் அருகே லாரி டிரைவரை வெட்டிக் கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

லாரி டிரைவர் கொலை

வேலூரை அடுத்த அப்துல்லாபுரத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் உள்ளது. இதன் பின்புறம் உள்ள மைதானத்தில்  வாலிபர் ஒருவர் தலை உள்பட உடலின் பல்வேறு இடங்களில் ரத்த காயங்களுடன் நேற்று இரவு 9 மணியளவில் உயிரிழந்து கிடந்தார். 

இதைக்கண்ட பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரிஞ்சிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிலவழகன் மற்றும் போலீசார் அங்கு சென்று வாலிபரின் உடலை பார்வையிட்டனர். பின்னர் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் இறந்துபோன நபர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

முதற்கட்ட விசாரணையில் இறந்து போன நபர் அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூர் அருகே உள்ள குருவராஜபாளையத்தை சேர்ந்த லாரி டிரைவர் பூபாலன் (வயது 35) என்பதும், கடந்த 6 மாதங்களாக அப்துல்லாபுரத்தில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து பூபாலனை கொலை செய்த மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், பூபாலன் முன்விரோதம், குடும்பத்தகராறு, தொழில் போட்டி அல்லது மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டாரா என்று விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.

அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்?, இந்த செயலை செய்த மர்ம நபர்கள் யார் என்ற விவரங்களை தீவிரமாக சேகரித்து வருகிறோம். பூபாலனை கொலை செய்து விட்டு தப்பியோடிய மர்ம நபர்களை ஓரிரு நாளில் பிடித்து விடுவோம் என்று  தெரிவித்தனர். 
லாரி டிரைவர் வெட்டிக் கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story