தொடக்க கல்வி மாணவர்கள் அனைவரையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும்- ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி


தொடக்க கல்வி மாணவர்கள் அனைவரையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும்- ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
x
தினத்தந்தி 2 May 2022 12:15 AM IST (Updated: 1 May 2022 11:49 PM IST)
t-max-icont-min-icon

தொடக்க கல்வி மாணவர்கள் அனைவரையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தி உள்ளது.

வடுவூர்:-

தொடக்க கல்வி மாணவர்கள் அனைவரையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தி உள்ளது. 

மே தின விழா

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் திருவாரூர் மாவட்டம் வடுவூரில் மே தின விழா நடந்தது. விழாவுக்கு வட்டார தலைவர் மாரிமுத்து தலைமை தாங்கினார். செயலாளர் மதியழகன் வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட பொருளாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் கலந்து கொண்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் ரா.தாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தொழில்நுட்ப ஊழியர்கள்

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக தற்போதைய முதல்-அமைச்சர் அறிவித்து இருந்தார். அதை நடைமுறைப்படுத்த வேண்டும். 2009-ம் ஆண்டுக்கு பிறகு நியமிக்கப்பட்டவர்களுக்கு ஊதிய முரண் களையப்பட வேண்டும்.
இ.எம்.இ.எஸ். எனும் தினசரி மாணவர்கள் வருகையை இணையத்தில் பதிவு செய்யும் முறையால், ஆசிரியர்கள் கற்றல், கற்பித்தல் முறையை செய்ய முடியாமல் நேரத்தை வீணடித்து ஆசிரியர்களின் கைகள் கட்டப்பட்டுள்ள சூழ்நிலை நிலவிவருகிறது. இப்படியே சென்றால் பள்ளி கல்வி துறை சீரழிந்துவிடும். எனவே இதற்காக அரசு தொழில் நுட்ப ஊழியர்களை நியமனம் செய்ய வேண்டும். பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும். 

அனைவரும் தேர்ச்சி

கடும் வெயிலால் தொடக்க கல்வி மாணவர்கள் அம்மை உள்ளிட்ட நோய் தாக்குதலுக்கு உள்ளாகும் வாய்ப்பு உள்ளது. எனவே தொடக்க கல்வி மாணவர்கள் அனைவரையும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து, இந்த கல்வி ஆண்டை நிறைவு செய்ய வேண்டும். 5 லட்சம் மாணவர் சேர்க்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணி நியமனத்தை அரசு அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாநில தலைவர் லட்சுமிபதி, மாநில பொருளாளர் தியாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Next Story