பரமத்திவேலூரில் எலக்ட்ரீசியனுக்கு அரிவாள் வெட்டு தந்தை, மகனுக்கு போலீசார் வலைவீச்சு


பரமத்திவேலூரில் எலக்ட்ரீசியனுக்கு அரிவாள் வெட்டு தந்தை, மகனுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 1 May 2022 11:58 PM IST (Updated: 1 May 2022 11:58 PM IST)
t-max-icont-min-icon

பரமத்திவேலூரில் எலக்ட்ரீசியனுக்கு அரிவாள் வெட்டு தந்தை, மகனுக்கு போலீசார் வலைவீச்சு

பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் சுல்தான்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கோடீஸ்வரன் (வயது 45). எலக்ட்ரீசியன். இவருடைய மனைவி ரேணுகா (40). இவர்களது வீட்டிற்கு அருகே பாலச்சந்திரன் (47) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்துரு என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் பாலச்சந்திரன், சந்துரு ஆகியோர் அடிக்கடி தங்களது காரை கோடீஸ்வரன் வீட்டின் எதிரே நிறுத்தி விட்டு அதிக சத்தத்துடன் பாடலை போட்டு கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. 
இதன் காரணமாக கோடீஸ்வரனுக்கும் பாலச்சந்திரனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் பாலச்சந்திரன், மகன் சந்துரு ஆகியோர் காரை கொண்டு வந்து கோடீஸ்வரன் வீட்டின் அருகே நிறுத்தி பாடல்களை சத்தமாக கேட்டு கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது கோடீஸ்வரன் தந்தை, மகனிடம் இதுகுறித்து கேட்டார். அப்போது அவர்களுக்கு இடையே வாய்தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த சந்துரு அங்கிருந்த அரிவாளை எடுத்து கோடீஸ்வரனின் இடது கையை வெட்டினார். இதை தட்டி கேட்ட அவருடைய மனைவி ரேணுகாவையும் அரிவாளால் வெட்ட முயன்றார். ஆனால் ரேணுகா அலறியபடி அங்கிருந்து தப்பியோடி வீட்டிற்குள் புகுந்து கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வருவதற்குள் பாலச்சந்திரன், சந்துரு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் கோடீஸ்வரனை மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய தந்தை, மகனை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story