மாவட்டத்தில் இடியுடன் பலத்த மழை சூறைக்காற்றுக்கு மரங்கள் முறிந்து விழுந்தன


மாவட்டத்தில் இடியுடன் பலத்த மழை சூறைக்காற்றுக்கு மரங்கள் முறிந்து விழுந்தன
x
தினத்தந்தி 2 May 2022 12:25 AM IST (Updated: 2 May 2022 12:25 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இடியுடன் நேற்று பலத்த மழை பெய்தது. சூறைக்காற்றுக்கு மரங்கள் முறிந்து விழுந்தன.

கிருஷ்ணகிரி:
அனல் காற்று
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் கிருஷ்ணகிரியில் அதிகப்பட்சமாக 108 டிகிரி வெயில் பதிவானது. இதனால் இரவிலும் வெப்பத்தின் தாக்கம் இருந்ததால், பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். 
இந்தநிலையில் நேற்றும் வழக்கம் போல் வெயிலின் தாக்கம் அதிகரித்து அனல் காற்று வீசியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். சாலைகளில் கானல் நீர் வெளியேறியது. பிரதான சாலைகளில் வாகனங்கள், மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
பலத்த மழை 
இதனிடையே நேற்று பிற்பகல் 3 மணிக்கு கிருஷ்ணகிரி, பர்கூர் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்தது. வள்ளுவர்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் பெய்த மழைக்கு மரங்கள் முறிந்து விழுந்தது. வீடுகளின் மேற்கூரைகள் பெயர்ந்து காற்றில் பறந்தன. 
இதே போல ஓசூர் பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது. ராயக்கோட்டை சுற்று வட்டாரத்தில் கனமழை பெய்ததால் சாலைகள் வெள்ளக்காடானது. சூளகிரி பகுதியில் பெய்த மழைக்கு தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்தது. மேலும் மரக்கிளைகள் ஆங்காங்கே உடைந்து மின் கம்பி மற்றும் வயரில் விழுந்து மின்சாரம் தடைபட்டது.

Next Story