மே தின விழாவையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் 251 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்


மே தின விழாவையொட்டி  தர்மபுரி மாவட்டத்தில் 251 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்
x
தினத்தந்தி 2 May 2022 12:29 AM IST (Updated: 2 May 2022 12:29 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் 251 ஊராட்சிகளில் மே தின விழாவையொட்டி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. மாங்கரையில் நடந்த கூட்டத்தில் கலெக்டர் திவ்யதர்சினி கலந்து கொண்டார்.

தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் 251 ஊராட்சிகளில் மே தின விழாவையொட்டி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. மாங்கரையில் நடந்த கூட்டத்தில் கலெக்டர் திவ்யதர்சினி கலந்து கொண்டார்.
கிராம சபை கூட்டம்
மே தின விழாவையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 251 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஊராட்சியின் வரவு செலவு கணக்குகள் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு கிராம வளர்ச்சி குறித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பென்னாகரம் ஒன்றியம் மாங்கரை ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா செந்தில் தலைமை தாங்கினார்.  கூட்ட நடவடிக்கைகளை கலெக்டர் திவ்யதர்சினி நேரில் பார்வையிட்டார். 
அப்போது கலெக்டர் பேசுகையில், தமிழக அரசு உத்தரவுப்படி கிராம சபை கூட்டம் அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் கிராமத்தின் வளர்ச்சி குறித்து பொதுமக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. கிராமங்களின் வளர்ச்சிக்கு அரசின் நிதியுதவி கிடைக்க பெற்றவுடன் அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்படும். அரசின் திட்டங்களை நிறைவேற்ற பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கூறினார். 
இந்த கூட்டத்தில் ஒன்றியக்குழு தலைவர் கவிதா ராமகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வடிவேலன், ரங்கநாதன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் ஸ்ரீனிவாச சேகர், தாசில்தார் அசோக்குமார், ஊராட்சி செயலாளர் மாதையன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செம்மாண்டகுப்பம்
தர்மபுரி ஒன்றியம் செம்மாண்டகுப்பம் ஊராட்சி சின்னபுதூர் கிராமத்தில்  கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் பானு பூமணி தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சரவணன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் தம்பி ஜெய்சங்கர், துணை தலைவர் தேவி அருள் ஞானசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் இடும்பன் வரவேற்றார். ஊராட்சி ஒன்றிய சாலை ஆய்வாளர் கோகிலா கூட்ட நடவடிக்கைகளை பார்வையிட்டார்.
இந்த கூட்டத்தில் கடந்த ஒரு ஆண்டுக்கான ஊராட்சியின் வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. சின்ன புதூர் கிராமத்தில் தொடக்கப்பள்ளி தொடங்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலையில் குண்டலப்பட்டி, நல்லாம்பட்டி ஆகிய 2 இடங்களில் அடிக்கடி சாலை விபத்துகள் நடப்பதால் அந்த பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் வார்டு உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story