மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வீட்டுமனை பட்டா கேட்டு 6-ந் தேதி மனுகொடுக்கும் போராட்டம் ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வீட்டுமனை பட்டா கேட்டு 6-ந் தேதி மனுகொடுக்கும் போராட்டம் ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி
நாமக்கல்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் நேற்று நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், மாநில அரசு நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று 2 மசோதாக்களை சட்டமன்றத்தில் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைத்தது. அந்த மசோதாவை கவர்னர் காலம் தாழ்த்தாமல் உடனடியாக குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும். மத்திய அரசு பெட்ரோலிய பொருட்கள் மீது விதிக்கப்பட்டு உள்ள அனைத்து வரிகளையும் குறைத்தாலே பெட்ரோல், டீசல் விலை பாதியாக குறையும். வருகிற 6-ந் தேதி தமிழ்நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் மாவட்ட கலெக்டரை சந்தித்து வீட்டு மனைப்பட்டா கேட்டு மனு கொடுக்கக்கூடிய போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். சமீபத்தில் சென்னை ஐகோர்ட்டு நீர்நிலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதை நாங்கள் வரவேற்கிறோம். எனவே மாநில அரசு உடனடியாக நீர்நிலைகளுக்கு பாதிப்பில்லாத அரசுக்கு பயன்படாத நிலங்களை உடனடியாக வகை மாற்றம் செய்து நெடுங்காலமாக குடியிருந்து வரக்கூடிய ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு மனை பட்டா வழங்க வேண்டும் என்றார். முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் மே தினத்தையொட்டி கட்சியின் கொடியினை ஏற்றினார். இதில் கட்சியின் மாவட்ட செயலாளர் கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வேலுச்சாமி, கண்ணன், ஜெயமணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். தொடர்ந்து நேற்று இரவு நாமக்கல் பூங்கா சாலையில் நடந்த மே தின பொதுக்கூட்டத்திலும் ராமகிருஷ்ணன் பேசினார்.
Related Tags :
Next Story