விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய முதன்மை கல்வி அதிகாரி உத்தரவு
கடலூர் அருகே அரசு பள்ளியில் நடந்த மாணவர்கள் மோதல் சம்பவம் தொடர்பாக விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, கல்வித்துறை அலுவலருக்கு உத்தரவிட்டுள்ளார்.
கடலூர்,
கடலூர் அருகே வெள்ளக்கரை வே.காட்டுப்பாளையத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் வெள்ளக்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இதில் 10-ம் வகுப்பு படித்து வரும் இரு சமுதாய மாணவர்களிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அதேபோல் கடந்த 29-ந்தேதி இரு தரப்பு மாணவர்களிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதில் 8 மாணவர்கள் காயமடைந்தனர். இதை கண்டித்து சாலை மறியல் போராட்டமும் நடந்தது.
மேலும் 16 பேர் மீது வழக்கு
இது பற்றி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசில் நேற்று முன்தினம் ஒரு சமுதாயத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவர் புகார் செய்தார். அதன்பேரில் மற்றொரு தரப்பை சேர்ந்த மாணவர்கள் 14 பேர் மீது கொலை மிரட்டல், வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
நேற்று மற்றொரு தரப்பை சேர்ந்த மாணவன் அளித்த புகாரில் 16 மாணவர்கள் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தாக்குதல் சம்பவம் தொடர்பாக இரு தரப்பை சேர்ந்த 30 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த சம்பவம் தொடர்பாக மேலும் அந்த பகுதியில் பிரச்சினை ஏற்படாமல் தடுக்க பள்ளி முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் பற்றி கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பூபதியிடம் கேட்ட போது, அவர் கூறியதாவது:-
ஆலோசனை
வெள்ளப்பாக்கம் வே.காட்டுப்பாளையத்தில் பள்ளி மாணவர்கள் மோதலில் ஈடுபட்ட சம்பவம் வேதனை அளிக்கிறது. இந்த சம்பவம் பற்றி அந்த பள்ளி தலைமை ஆசிரியர் அறிக்கை கொடுத்துள்ளார். இருப்பினும் மாவட்ட கல்வி அலுவலரை மேல் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தி உள்ளேன். இது தவிர மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கவும் முடிவு செய்துள்ளோம்.
சிறந்த மனோதத்துவ நிபுணர் மூலமாக இதை வழங்க இருக்கிறோம். பள்ளி காலத்தில் மாணவர்களுக்கு படிப்பு தான் முக்கியம். அதை வலியுறுத்தி இந்த ஆலோசனை இருக்கும். இதேபோல் அனைத்து அரசு பள்ளிகளிலும் விரைவில் ஆலோசனை வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story