பசவராஜ் பொம்மையின் தலைமையை மாற்ற முடிவு?; பி.எல்.சந்தோஷ் பேச்சால் பா.ஜனதாவில் பரபரப்பு
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டே உள்ள நிலையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் தலைமையை மாற்ற முடிவு? செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பி.எல்.சந்தோசின் பேச்சால் பா.ஜனதாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு:
புதியவர்களுக்கு வாய்ப்பு அளிப்பதே....
கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு (2023) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜனதா சொந்த பலத்தில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க மேலிடம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இதையடுத்து, சட்டசபை தேர்தலுக்கான பணிகளை பா.ஜனதா மேலிடம் தற்போதில் இருந்தே தொடங்கி விட்டது. இந்த நிலையில், மைசூருவில் நேற்று பா.ஜனதா கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், மந்திரிகள் உள்பட முக்கிய நிா்வாகிகள் கலந்து கொண்டனர். அதுபோல், பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோசும் கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில் அவர் பேசும் போது, "டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஏற்கனவே கவுன்சிலராக இருந்தவர்களுக்கு சீட் கொடுக்கவில்லை. குஜராத் மாநகராட்சி தேர்தலிலும் 2 முறை வெற்றி பெற்றவர்கள் ஓரங்கட்டப்பட்டனர். புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து பா.ஜனதா அதிகாரத்திற்கு வந்துள்ளது. பா.ஜனதாவில் மட்டுமே இதுபோன்று நடப்பது சாத்தியமாகும். புதியவர்களுக்கு வாய்ப்பு அளிப்பதே பா.ஜனதா கட்சியின் வெற்றிக்கு காரணம்," என்றார்.
பா.ஜனதாவில் பரபரப்பு
பா.ஜனதா கூட்டத்தில் பி.எல்.சந்தோஷ் பேசி இருப்பது தற்போது மாநிலத்தில் எம்.எல்.ஏ.வாக இருப்பவர்களுக்கு வருகிற 2023-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று (திங்கட்கிழமை) பெங்களூருவுக்கு வருகை தர உள்ளாா். மந்திரிசபை விரிவாக்கம், மாநிலத்தில் கட்சியை பலப்படுத்துவது குறித்து அவர் ஆலோசனை நடத்த உள்ளார்.
அதே நேரத்தில் பி.எல்.சந்தோசின் பேச்சு, கர்நாடக பா.ஜனதாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனெனில் மாற்றம் ஒன்றே பா.ஜனதா வெற்றியின் பலம் என்றும் அவர் பேசி இருந்தார். இதன் காரணமாக குஜராத், பிற மாநிலத்தை போன்று கர்நாடகத்திலும் புதிய தலைமையை நியமிக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
பசவராஜ் பொம்மை மாற்றம்?
அதாவது சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு இருப்பதால், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை மாற்றிவிட்டு, அவருக்கு பதிலாக புதியவர் நியமிக்கப்படலாம் என்ற தகவலும் பரவி வருகிறது. மேலும் அமித்ஷாவின் பெங்களூரு வருகைக்கு பின்பு கா்நாடக பா.ஜனதாவில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஆனால் பசவராஜ் பொம்மை தலைமையிலேயே 2023-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை பா.ஜனதா சந்திக்கும் என்று இதற்கு முன்பு பல முறை அமித்ஷாவே கூறி இருந்தார். இதனால் பசவராஜ் பொம்மை மாற்றப்படுவாரா? அல்லது மந்திரிசபையை மாற்றியமைத்து விட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
Related Tags :
Next Story