மே தின கிராம சபை கூட்டம்


மே தின கிராம சபை கூட்டம்
x
தினத்தந்தி 2 May 2022 2:02 AM IST (Updated: 2 May 2022 2:02 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணம், பேராவூரணி, அம்மாப்பேட்டை பகுதிகளில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

கும்பகோணம்:
கும்பகோணம், பேராவூரணி, அம்மாப்பேட்டை பகுதிகளில்  கிராமசபை கூட்டம் நடைபெற்றது. 
கும்பகோணம் 
கும்பகோணம் பகுதியில் உள்ள 47 ஊராட்சி மன்றங்களில் மே தினத்தையொட்டி நேற்று கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றன. கும்பகோணம் அருகே பெரும்பாண்டி ஊராட்சியில் நடந்த கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். கோட்டாட்சியர் லதா, தாசில்தார் தங்கபிரபாகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜன், ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அன்பழகன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பேசினார். பின்னர் கிராமமக்கள் வழங்கிய பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, அந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  உரிய விசாரணை மேற்கொண்டு தீர்வு காண அறிவுறுத்தினார். முடிவில் பெரும்பாண்டி ஊராட்சி செயலாளர் புண்ணியமூர்த்தி நன்றி கூறினார்.
பேராவூரணி 
பேராவூரணி ஒன்றியம் தென்னங்குடி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் குணதா சரவணன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மாணிக்கவாசகம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில்  ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர், கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து பொதுமக்களுக்கும் ஊராட்சி மன்றம் சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
அம்மாப்பேட்டை 
அம்மாப்பேட்டை ஒன்றியம்  கம்பர் நத்தம் ஊராட்சி மன்ற சமுதாய சேவை மைய கட்டிடத்தில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் சத்யநாராயணன் தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ரமேஷ்  முன்னிலை வகித்தார். கூட்டத்தில் 2022-23-ம் ஆண்டில் ஊராட்சியில் மேற்கொள்ள வேண்டிய அனைத்து வளர்ச்சி திட்டப்பணிகளையும் தேர்வு செய்து பணிகளை மேற்கொள்வது. ஊராட்சி பகுதியில் பொது சுகாதாரம், குடிநீர் வசதி உள்ளிட்டவைகளை மேம்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டது. 
களஞ்சேரி ஊராட்சியில்  சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் மல்லிகா முன்னிலை வகித்தார். அருந்தவபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில்  கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் சரிதா ஆசைதம்பி தலைமை தாங்கினார்.   துணைத்தலைவர் தாமரைச்செல்வி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் , ஊராட்சியில் மேற்கொள்ளவேண்டிய குடிநீர், சுகாதார மேம்பாடு, பொது மக்களின் சுகாதார மேம்பாடு, பிளாஸ்டிக் ஒழிப்பு ஆகியவை குறித்து கலந்தாய்வு செய்து பணிகளை மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.

Next Story