ஒரு நபர் குழு 2-வது நாளாக விசாரணை


ஒரு நபர் குழு 2-வது நாளாக விசாரணை
x
தினத்தந்தி 2 May 2022 2:26 AM IST (Updated: 2 May 2022 2:26 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில், தேரில் மின்சாரம் தாக்கி 11 பேர் பலியான விபத்து குறித்து ஒரு நபர் குழு 2-வது நாளாக விசாரணை செய்தது.

தஞ்சாவூர்:
தஞ்சையில், தேரில் மின்சாரம் தாக்கி 11 பேர் பலியான விபத்து குறித்து ஒரு நபர் குழு 2-வது நாளாக விசாரணை செய்தது.
மின்சாரம் தாக்கி 11 பேர் பலி
தஞ்சையை அடுத்த களிமேடு கிராமத்தில் அப்பர் என்கிற திருநாவுக்கரசு சுவாமிகளின் மடம் உள்ளது. மிகவும் பழமைவாய்ந்த இந்த மடத்தில் கடந்த 26-ந் தேதி இரவு 11.30 மணி அளவில் தேரோட்டம் தொடங்கியது.
 27-ந் தேதி அதிகாலை 3 மணி அளவில் தாழ்வாக சென்ற உயர் மின்னழுத்த கம்பியில் தேரின் மேல்பகுதி உரசியதால் மின்விபத்து ஏற்பட்டு மின்சாரம் தாக்கியதில் 3 சிறுவர்கள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 17 பேர் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கருத்துக்களை பதிவு செய்தனர்
இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த் என்பவர் ஒரு நபர் குழு தலைவராக நியமித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி ஒருநபர் குழு தலைவர் குமார் ஜெயந்த் நேற்றுமுன்தினம் விசாரணையை தொடங்கினார்.
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் அவர், வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்வாரியத்துறை, போலீஸ்துறை உயர் அலுவலர்களுடன் விசாரணை நடத்தினார். பின்னர் அவர், களிமேடு கிராமத்திற்கு நேரில் சென்று மின்விபத்து ஏற்பட்ட இடத்தையும், தீயில் எரிந்த தேரையும் பார்வையிட்டார். தொடர்ந்து மாலையில் தஞ்சை கலெக்டர் அலுவலத்திற்கு களிமேடு கிராமமக்கள் 12 பேர் நேரில் வந்து குமார் ஜெயந்தை சந்தித்து விபத்து எப்படி நடந்தது என தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.
2-வது நாளாக விசாரணை
2-வது நாளாக நேற்றுகாலை மீண்டும் களிமேடு கிராமத்திற்கு குமார் ஜெயந்த் நேரில் சென்று விசாரணை நடத்தினார். அப்போது அங்கு தீயில் எரிந்த தேரை சுற்றி வைக்கப்பட்டு இருந்த இரும்பு தடுப்புகளை அகற்ற சொல்லிவிட்டு, தேரை சுற்றி வந்து பார்வையிட்டார். தொடர்ந்து மின்கம்பிக்கும், தேருக்கும் உள்ள தூரம் குறித்து அளவீடு செய்து அதை புகைப்படமாக பதிவு செய்து கொண்டார்.
பின்னர் தேர், அலங்கார தட்டிகள், அலங்கார தட்டிகள் வைக்கப்பட்டிருந்த கம்பிகள், தேரில் கருகி இருந்த மின்வயர்கள் எப்படி உள்ளது, ஜெனரேட்டரின் நிலை ஆகியவற்றை புகைப்படம் எடுக்கும்படி அரசு புகைப்படக்காரருக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வு
 இதையடுத்து தேர் வீதிஉலா சென்ற பகுதி, அப்பர் மடம் ஆகியவற்றையும் ஆய்வு செய்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட அவர், கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றார். அங்கு காலை 10.30 மணி வரை  இருந்தார். பின்னர் நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டங்குடியில் நடந்த கோவில் திருவிழாவில் சப்பரத்தின் சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலியானது குறித்து விசாரணை நடத்துவதற்காக குமார் ஜெயந்த் காரில் புறப்பட்டு சென்றார்.
பேட்டி
முன்னதாக அவர் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
விபத்து நடந்த கிராமத்திற்கு 2-வது நாளாக நேரில் சென்று விசாரணை நடத்தி உள்ளோம்.  முதல்நாள் விசாரணையில் 8 அலுவலர்கள், 12 கிராம மக்கள் தங்களது கருத்தை பதிவு செய்துள்ளனர். முதல்கட்டமாக விபத்து நடந்தபோது அந்த இடத்தில் இருந்தவா்களிடம் விசாரித்துள்ளோம். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களின் சிகிச்சை விவரங்கள், மின்சாரத்துறை விபரங்கள், அதிகாரிகள் அளித்த தகவல் ஆகியவற்றை சேகரித்துள்ளோம்.
தாமதம்
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்கள் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு சென்றபிறகு தனியாக அவர்களிடம் விசாரணை நடத்தப்படும். விசாரணை இன்னும் முடியவில்லை. எல்லோரும் ஒரே கருத்தை தெரிவிக்கிறார்களா? அல்லது மாற்றி, மாற்றி சொல்கிறார்களா? என்பதை பார்ப்போம். முழுமையாக விசாரணை முடிந்த பிறகு தான் அறிக்கை தயார் செய்ய உள்ளோம். தேவைப்பட்டால் தொடர்ந்து விசாரணை நடைபெறும். இதனால் அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்க தாமதம் ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story