தோட்டத்தில் கட்டி இருந்த மாட்டை அடித்துக் கொன்ற சிறுத்தை
விக்கிரமசிங்கபுரம் அருகே தோட்டத்தில் கட்டி இருந்த மாட்டை சிறுத்தை அடித்துக் கொன்றது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் அருகே தோட்டத்தில் கட்டி இருந்த மாட்டை சிறுத்தை அடித்துக் கொன்றது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிறுத்தை
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், பாபநாசம் வனச்சரகத்துக்கு உட்பட்ட திருப்பதியாபுரம், கோதையாறு, வேம்பையாபுரம் உள்ளிட்ட மலையடிவார கிராமங்கள் உள்ளது. இங்குள்ள மக்களின் பிரதான தொழில் விவசாயமாகும்.
மேலும் இவர்கள் தங்களது வீடுகளில் ஆடு, மாடு, கோழி, நாய் உள்ளிட்ட கால்நடைகளையும் வளர்த்து வருகின்றனர். மேற்கு தொடர்ச்சி மலையடிவார கிராமங்களாக இருப்பதால் வனப்பகுதியில் இருந்து சிறுத்தை அவ்வப்போது ஊருக்குள் புகுந்து கால்நடைகளை தூக்கிச் செல்லும் சம்பவங்களும் வாடிக்கையாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து வனத்துறையினர் இரும்புக்கூண்டு அமைத்து 7 சிறுத்தைகளை பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.
மாட்டை அடித்துக் கொன்றது
அதன் பின்னர் கடந்த பல மாதங்களாக சிறுத்தை அட்டகாசம் இல்லாத நிலையில், தற்போது மீண்டும் சிறுத்தை அட்டகாசம் தொடர்ந்துள்ளது. விக்கிரமசிங்கபுரம் அருகே ஆலடியூர் பீட்டிற்கு உட்பட்ட செட்டிமேடு கிராமத்தில் வசிப்பவர் ராஜா. இவர் தனது தோட்டத்தில் பசு மாட்டை கட்டி இருந்தார். நேற்று மலையடிவாரத்தில் ஊருக்குள் புகுந்த சிறுத்தை அவரது மாட்டை அடித்துக் கொன்றது.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் பாபநாசம் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு, சிறுத்தையின் தடயங்களை சேகரித்தனர்.
மேலும் சிறுத்தை கடித்ததில் பலியான மாட்டிற்கான உரிய இழப்பீடு, பாதிக்கப்பட்டவருக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மாட்டை சிறுத்தை அடித்துக் கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story