மதுரை புறநகர் பகுதியில் பலத்த மழை


மதுரை புறநகர் பகுதியில் பலத்த மழை
x
தினத்தந்தி 2 May 2022 3:09 AM IST (Updated: 2 May 2022 3:09 AM IST)
t-max-icont-min-icon

மதுரை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று பலத்த மழை பெய்தது. வீட்டின் மீது மரம் விழுந்ததில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

மதுரை,

மதுரை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று பலத்த மழை பெய்தது. வீட்டின் மீது மரம் விழுந்ததில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

பலத்த மழை

மதுரையில் நேற்று காலை முதல் வெயில் சுட்டெரித்தது. கடும் அனல் காற்று வீசியதால் பகலில் சாலைகளில் நடமாடிய மக்கள் மிகவும் அவதிப்பட்டனர். இந்த நிலையில் இரவு 7 மணிக்கு மேல் திடீரென்று மழை பெய்ய ஆரம்பத்தது. இந்த மழை அரை மணி நேரம் நீடித்து இருக்கும். இந்த மழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சிதோஷ்ண நிலை நிலவியது.
மதுரை புறநகர் பகுதிகளில் நேற்று மாலையில் பலத்த மழை பெய்தது. வாடிப்பட்டி பகுதியில் நேற்று இரவு 7 மணியிலிருந்து 8 மணி வரை இடி,மின்னல் சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாணாம்பட்டி, குரங்கு தோப்பு, பாண்டியராஜபுரம், பெருமாள்பட்டி, செல்வகுளம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் பள்ளங்களில் தேங்கி நின்றது.இதனால் பகலில் அடித்த வெயிலின் வெப்ப தாக்கம் குறைந்து இரவு முழுவதும் குளிர் காற்று வீசியதால் குளுமையாக இருந்தது.

மரம் விழுந்து 3 பேர் படுகாயம்

சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் விநாயகபுரம் காலனியில் ஒரு வீட்டின் மீது பனை மரம் விழுந்தது. இதில் அமிர்தம் (வயது 55), பாண்டித்துரை (22), பாண்டிபிரகாஷ் (20) ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் அவர்கள் மீட்கப்பட்டு சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சோழவந்தான் பகுதியில் வட்ட பிள்ளையார்கோவில் அருகே உயர் மின் அழுத்த வயர் மீது மரம் விழுந்தது. இதனால் அந்த பகுதியில் சுமார் 3 மணி நேரம் மின்தடை ஏற்பட்டு இருளில் மூழ்கியது.

அழகர்கோவில், பேரையூர்

அழகர்கோவில் பகுதி, அழகர்மலை பகுதி, மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று மாலையில் இடியுடன், கூடிய பலத்த மழை சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் பெய்தது. இதனால் இக்கோவிலின் கோட்டை வாசல் பகுதி மழை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் மரக்கிளைகள் ஒடிந்து காணப்பட்டது. இதைப் போல அலங்காநல்லூர், பாலமேடு, மற்றும் காஞ்சரம் பேட்டை வட்டாரங்களிலும் பலத்த இடி மின்னலுடன் மழை பெய்தது. இதனால் மானாவாரி, மற்றும் தோட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
பேரையூர், டி.கல்லுப்பட்டி பகுதிகளில் நேற்று ஒரு மணி நேரம் மழை பெய்தது. இந்த மழையால் டி.குன்னத்தூர் அருகே திருமங்கலம்- ராஜபாளையம் சாலையில் உள்ள பழமையான புளியமரம் ஒன்று சாலையில் விழுந்தது. இதனால் அந்த சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.டி. கல்லுப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மரத்தை அப்புறப்படுத்தியவுடன் போக்குவரத்து சீரானது.

Next Story