வெளிப்படையான அரசு நிர்வாகத்தை கிராம சபை கூட்டங்கள் உறுதிப்படுத்துகின்றன-கலெக்டர் கார்மேகம் பேச்சு


வெளிப்படையான அரசு நிர்வாகத்தை கிராம சபை கூட்டங்கள் உறுதிப்படுத்துகின்றன-கலெக்டர் கார்மேகம் பேச்சு
x
தினத்தந்தி 2 May 2022 3:31 AM IST (Updated: 2 May 2022 3:31 AM IST)
t-max-icont-min-icon

வெளிப்படையான அரசு நிர்வாகம் நடைபெறுவதை கிராமசபை கூட்டங்கள் உறுதிப்படுத்துகின்றன என்று கலெக்டர் கார்மேகம் கூறினார்.

சேலம்:
வெளிப்படையான அரசு நிர்வாகம் நடைபெறுவதை கிராமசபை கூட்டங்கள் உறுதிப்படுத்துகின்றன என்று கலெக்டர் கார்மேகம் கூறினார்.
கிராம சபை கூட்டம்
சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம், ஆலடிப்பட்டி ஊராட்சி, அருநூத்துமலை கிராமத்தில் மே தினத்தையொட்டி கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கி பேசினார். 
அப்போது அவர் பேசியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் நலனுக்கென பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அதன்படி கிராமப்புற மக்களின் வாழ்வாதார மேம்பாட்டில் தனி கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார். 
மேலும் அரசு நிர்வாகம் வெளிப்படையாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் ஆண்டுக்கு 6 நாட்கள் கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவித்து உள்ளார்.
பெண்கள் முன்னேற்றம்
இக்கூட்டத்தில் 5 ஆண்டுகளில் கிராமத்தின் வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் அடித்தட்டு மக்களின் நலன், பெண்களின் முன்னேற்றம், தடுப்பூசி செலுத்துதல், ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்தும் வழிவகைகளை கண்டறிதல், நீர் மேலாண்மை, மழை நீர் சேகரிப்பு கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. 
மேலும், ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்படுத்த தடை செய்தல், கழிப்பறை கட்டி பயன்படுத்தும் பயனாளிகளுக்கு பாராட்டு தெரிவித்தல், கழிப்பறை இல்லாதோர் விவரப்பட்டியல் தெரிவித்தல் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. பொதுமக்களின் தேவைகளை அறிந்து உடனுக்குடன் நிறைவேற்ற அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. வெளிப்படையான அரசு நிர்வாகம் நடைபெறுவதை கிராமசபை கூட்டங்கள் உறுதிப்படுத்துகின்றன. 
இவ்வாறு கலெக்டர் பேசினார். 
கலெக்டரின் மனைவி, மகன் பங்கேற்பு
இதில் பழங்குடியினர் நலத்திட்ட அலுவலர் சாந்தி, உதவி கலெக்டர் விஷ்ணுவர்த்தினி, அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் புவனேஸ்வரி செந்தில்குமார், ஊராட்சி உதவி இயக்குனர் மணிவாசகம், வட்டார வளர்ச்சி அலுவலர் சிராஜூதீன், ஆலடிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் கார்மேகம் தனது மனைவி அம்பிகா, மகன் ஆதி ஆகியோருடன் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story