தாரமங்கலம் தினசரி மார்க்கெட் முன்பு நகராட்சி கவுன்சிலர்கள் சாலைமறியல்-கூடுதல் சுங்க கட்டணம் வசூலிப்பதாக புகார்


தாரமங்கலம் தினசரி மார்க்கெட் முன்பு நகராட்சி கவுன்சிலர்கள் சாலைமறியல்-கூடுதல் சுங்க கட்டணம் வசூலிப்பதாக புகார்
x
தினத்தந்தி 2 May 2022 3:39 AM IST (Updated: 2 May 2022 3:39 AM IST)
t-max-icont-min-icon

தாரமங்கலம் தினசரி மார்க்கெட்டில் கூடுதல் சுங்க கட்டணம் வசூலிப்பதாக நகராட்சி கவுன்சிலர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

தாரமங்கலம்:
தாரமங்கலம் தினசரி மார்க்கெட்டில் கூடுதல் சுங்க கட்டணம் வசூலிப்பதாக நகராட்சி கவுன்சிலர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
சாலைமறியல்
தாரமங்கலம் நகராட்சியில், தினசரி மார்க்கெட், வாரச்சந்தை, வண்டிப்பேட்டை, ஆடு அடிக்கும் தொட்டி ஆகியவற்றை ஏலம் எடுத்த குத்தகைதாரர்கள், வியாபாரிகளிடமும், கடைக்காரர்களிடமும் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட கூடுதலாக பெறுவதாக வார்டு கவுன்சிலர்கள் நகராட்சி கூட்டத்தில் புகார் தெரிவித்து வந்தனர். இதையடுத்து அரசு நிர்ணயம் செய்த கட்டண விவர பலகை நேற்று முன்தினம் மார்க்கெட் பகுதியில் வைக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று காலை நகராட்சி வார்டு கவுன்சிலர்கள் 1-வது வார்டு பழனிச்சாமி, 3-வது வார்டு குமரேசன் ஆகியோர் பொதுமக்களுடன் அங்கு திரண்டு வந்தனர். அங்கு அவர்கள் நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் சுங்க கட்டணம் வசூலிப்பதாக புகார் கூறி, தினசரி மார்க்கெட் முன்புள்ள சாலையில் அமர்ந்து திடீரென மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
தகவல் கிடைத்ததும் அங்கு விரைந்து வந்த, தாரமங்கலம் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதானம் பேசியதை அடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி தலைவர் குணசேகரன், ஆணையாளர் மங்கையர்க்கரசன் ஆகியோர் வியாபாரிகளிடமும், குத்தகைதாரர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இது குறித்து குத்தகைதாரர்கள் கூறும் போது, நகராட்சியாக தாரமங்கலம் தரம் உயர்த்தப்பட்டு உள்ளதால், சுங்க கட்டணத்தை உயர்த்திட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இது குறித்து நகராட்சி ஆணையாளர் மங்கையர்க்கரசன் கூறும் போது,‘ இந்த ஆண்டுக்கான ஏலத்தில் 2005-ம் ஆண்டுக்கான கட்டண வசூல் முறை தான் பின்பற்றப்படும் என்று கூறியுள்ளோம். இருப்பினும் சுங்க கட்டண உயர்வு குறித்து ஒப்பந்ததாரர்களிடம் இருந்து கோரிக்கை வரும் பட்சத்தில் மன்ற கூட்டத்தில் வைத்து தீர்மானிக்கப்படும்’ என்றார்.

Next Story