‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 2 May 2022 3:43 AM IST (Updated: 2 May 2022 3:43 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

ஆபத்தான சத்துணவு கூடம்
சிவகிரி பேரூராட்சிக்கு உள்பட்ட 2-வது வார்டு அண்ணாமலை கோட்டை தொடக்கப்பள்ளியில் சத்துணவுக்கூடம் உள்ளது. ஆனால் அந்த சத்துணவுக்கூடம் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் ஆபத்தாக காணப்படுகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீசிய சூறாவளிக்காற்றால் அந்த சத்துணவுக்கூடத்தின் மேற்கூரையின் ஒரு பகுதியில் இறங்கிவிட்டது. எனவே ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படும் முன் சத்துணவுக்கூடத்தை சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
ஆனந்தராஜ், சிவகிரி. 


வீதி பெயர் வேண்டும்
ஈரோடு ஜான்சி நகர் முதல் வீதியில் நகராட்சி நிர்வாகம் சார்பில் வீதி பெயர் குறித்த அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் அந்த அறிவிப்பு பலகையில் வீதி பெயர் குறித்த அறிவிப்பு இல்லை. அந்த அறிவிப்பு பலகையில் தனியார் நிறுவனங்களின் நோட்டீசுகள் ஒட்டப்பட்டு உள்ளன. இதனால் வீதியின் பெயர் தெரியாமல் வெளியூரில் இருந்து வருபவர்கள் மிகவும் குழப்பம் அடைகிறார்கள்.  எனவே அந்த அறிவிப்பு பலகையில் வீதி பெயர் வைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், ஜான்சி நகர்.

குழாய் அகற்றப்படுமா?
நம்பியூர் கொன்னமடையில் தோட்டகாட்டு கருப்பராயன் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே உள்ள கடைகளில் நீண்ட நாட்களாக ஒரு ராட்சத குழாய் உள்ளது. இதனால் எங்கள் வியாபாரம் பாதிப்படைந்துள்ளது. உடனே குழாயை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கொன்னமடை.

அடிப்படை வசதி வேண்டும்
பவானி தாலுகா தொட்டிபாளையம் ஊராட்சிக்கு உள்பட்டது புதுக்காடையம்பட்டி. இங்குள்ள 11-வது வார்டில் சாக்கடை, குடிநீர், சாலைவசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.. உடனே அடிப்படை வசதிகள் செய்துதர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், புதுக்காடையம்பட்டி.

பூங்காவை பராமரிக்க வேண்டும்
கோபி கோசலை நகரில் நகராட்சி பூங்கா பராமரிக்கப்படாமல் உள்ளது. இதனால் இங்கு குப்பைகளை கொட்டுவதால் வேலி முட்கள் வளர்ந்து காணப்படுகிறது. அதன் இடையில் சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்களும் உற்பத்தியாகியுள்ளன. இதனால் நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளபூங்காவில் இருந்து பாம்பு போன்ற விஷ ஜந்துக்களும் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் புகுந்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். உடனே பூங்காவை பராமரிக்கஅதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கோசலை நகர், கோபிசெட்டிபாளையம்.

சாலை சீரமைக்கப்படுமா?
ஈரோடு ஈ.வி.கே.சம்பத் சாலையில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிக்காக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் பணி முடிந்தும் ரோடு சீரமைக்கப்படவில்லை. இந்த சாலை சேலம், மேட்டூர் மற்றும் பவானி செல்லும் முக்கிய பிரதான சாலை ஆகும். தினமும் ஏராளமான வாகனங்கள் இந்த வழியாக சென்று வருகின்றன. ரோடு சீரமைக்கப்படாததால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். விரைவில் தார்சாலை சீரமைப்பு பணியை முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜெகநாதன், ஈரோடு.

Next Story